பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 731

விளையாட்டைப்போல் பட்சிகளையும் மச்சங்களையுங் கொன்றுத் திரியுங் குறும்பில்லாமலும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி, சீவராசிகளைத் தன்னுயிர்போல் காத்து இராஜ விசுவாசத்தில் நிலைத்து நீர்வளம் நிலவளம் ஓங்க அன்பும் ஈகையும் பெருக நிற்பதே நாடு என்பது விரிவு.

6.கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டிற் றலை.

(ப.) கேடறியாக் - குறைவற்ற தானியம் விளைந்து, கெட்டவிடத்தும் - ஒருகால் விளைவுகுறையினும், வளங்குன்றா - நீர் வளம் நிலவளங் குன்றா திருப்பதே, நாடென்ப - நாடென்று சொல்லப்படுவதினும், நாட்டிற்றலை - அதன் சகல நாடுகளுக்குந் தலையாய வளநாடென்னப்படும் என்பது பதம்.

(பொ.) குறைவற்ற தானியம் விளைந்து ஒருகால் விளைவு குறையினும் நீர்வளம் நிலவளங் குன்றாதிருப்பதே நாடென்று சொல்லப்படுவதினும் அதனை சகல நாடுகளுக்குந் தலையாய வளநாடென்னப்படும் என்பது பொழிப்பு.

(க.) நன்றாக விளைந்தும் பூமி ஒருகால் விளைவு குன்றினும் நீர்வளம் நிலவளம் பொருந்தியுள்ள நாடே சகல நாட்டிற்கு மேலாய வளநாடென்று கூறத்தகும் என்பது கருத்து.

(வி.) முதலீவோர் உதவியற்றும் உழைப்பாளிகள் சுகமற்றும் நன்றாக விளைந்திருந்த நாடு விளைவு குன்றுமாயினும் நீரின் வசதிகளும் நிலவசதிகளும் மட்டிலும் மாறாதிருக்குமாயின் அந்நாட்டையே சகலநாடுகளிலும் மேலாய வளநாடெனக் கூறத்தகும் என்பது விரிவு.

7.இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லாணும் நாட்டிற் குறுப்பு.

(ப.) நாட்டிற் குறுப்பு - நாடுகளுக்கு முக்கிய வங்கங்கள் யாதெனில், இரு புனலும் - மழைநீர் ஆற்றுநீர் இரண்டுடன், வாய்ந்த - நெருங்கியமைந்த, மலையும் - மலையினின்று, வருபுனலும் - இறங்கும் நீருற்றும், வல்லாணும் - வல்லப மிகுத்த அரசன் வாழும் நகரமுமாமென்பது பதம்.

(பொ.) நாடுகளுக்கு முக்கிய அங்கங்கள் யாதெனில் மழைநீர், ஆற்றுநீர் இரண்டுடன் நெருங்கியமைந்த மலையினின்றிறங்கும் நீருற்றும் வல்லபமிகுத்த அரசன் வாழும் நகரமுமாம் என்பது பொழிப்பு.

(க.) காலமழையும் ஆற்றுநீர் பாய்ச்சலும் மலையருவி நீரும் வல்லப மிகுத்த அரசன் வாழும் அரண்மனையும் நாடுகளுக்கு முக்கிய அங்கங்களெனக் கூறுத்தகும் என்பது கருத்து.

(வி.) விசேடவளநாடு என்பதற்கு முக்கியமாய அங்கங்களென்னும் உறுப்புக்கள் ஏதென்னில் காலமழைத் தவராமல் பெய்துவருமிடமும் ஆற்றுநீர் பாய்ச்சலும் மலையருவி நீர்வடிதலும் இராட்சியபாரஞ் சகலவற்றையுந் தாங்கும் வல்லபமிகுத்த அரசன் வாழும் நகரமுமாம் என்பது விரிவு.

8.பிணியின்மெ செல்வம் விளைவின்பமேம
மணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.

(ப.) பிணியின்மெ - நோயற்றவுடலும், செல்வம் - குறைவற்ற தனமும், விளை - பயிறுகள் ஓங்கிவளர்தலும், வின்பம் - ஆனந்த நிலையும், மேம - தங்களை யடக்கியாண்டுக் கொள்ளும் விரதமுமாய, நாட்டிற் கிவ்வைந்து - இவ்வைந்தும் வளநாட்டில், மணியென்ப - தானியக் குவியல் நிறைவதற்கோராதாரமா மென்பது பதம்.

(பொ.) நோயற்றவுடலும் குறைவற்ற தனமும் பயிறுகள் ஓங்கிவளர்தலும் ஆனந்த நிலையும் தங்களை அடக்கி ஆண்டுக்கொள்ளும் விரதமுமாய இவ்வைந்தும் வளநாட்டில் தானியக் குவியல் நிறைவதற்கோர் ஆதாரம் என்பது பொழிப்பு.

(க.) நாடுகளில் தானியமணிகள் குவிதற்கு தங்களைக் காக்கும் விரதமும் சுகமும் பயிரோங்கும் ஆனந்த நிலையும் நோயற்ற வுடலும் குறைவற்ற செல்வமுமாய யிவ்வைந்துமே ஆதாரமாம் என்பது கருத்து.