பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

732 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) வளநாட்டில் தானிய மணிகள் நிறம்பப் போரிடுவதற்கு ஆதாரங்கள் யாதெனில் மனோவாக்குக் காயங்களை அடக்கியாளும் விரதமும் பயிறுகளை ஓங்கி வளரச்செய்யும் முயற்சியும் சுகமும் பிணியணுகாதிருக்கும் உடலுங் குறைவற்ற செல்வமுமாகிய ஐந்துமேயாம் என்பது விரிவு.

9.நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

(ப.) நாடென்ப - நாடென்று சொல்லும்படியானது, நாடா - வரியோர்களை நாடாது, வளத்தன - விளைவை மட்டிலும் நாடுதல், நாடல்ல - நாடென்று சொல்லுவதற்காதாரமில்லை, நாட - வரியோர்களைத் தேடியவர்களுக்கீவதாயின், வளந்தரு - தானியமணிகள் பெருகுவதுடன், நாடு - அதனை வளநாடென்றுங் கூறத்தகுமென்பது பதம்.

(பொ.) நாடு என்று சொல்லும்படியானது வரியோர்களை நாடாது விளைவை மட்டிலும் நாடுதல் நாடு என்று சொல்லுவதற்கு ஆதாரமில்லை, வரியோர்களைத் தேடி அவர்களுக்கு ஈவதாயின் தானியமணிகள் பெருகுவதுடன் அதனை வளநாடு என்றுங் கூறத்தகும் என்பது பொழிப்பு.

(க.) தங்கள் தங்கள் பயிறுகளை ஓங்க வளர்ப்பது போல் ஏழை வரியோர்களை ஓங்க வளர்க்காதது நாடாகாவாம், தங்கள் பயிற்றை சீர்தூக்கி வளர்ப்பதுபோல் ஏழைக்குடிகளையும் ஓங்க வளர்ப்பதாயின் தானியமணி வளம்பெருகுவதுடன் வளநாடென்று அவற்றைக் கூறத்தகும் என்பது கருத்து.

(வி.) தாபர வர்க்கங்களாகிய மணிகளை மட்டிலும் ஒங்கச் செய்வோர்கள் தங்களை ஒத்த மநுமக்களாகிய ஏழைகளை ஓங்கச் செய்யார்களாயின் அந்நாடு வளநாடாகாததுடன் அவர்களோங்க வளர்க்கும் தானிய மணிகளும் ஓங்காவாம். தானியங்கள் ஓங்கிப் பலன் பெறவேண்டியவர்கள் தங்களை ஒத்த மநுமக்களாம் ஏழைகள் ஓங்கிப்பலுகிப் பெருகக்கருதி ஈவார்களாயின் அவர்கள் விளைவிக்கும் தானியங்களும் ஓங்கிவளருவதுடன் அந்நாட்டையும் வளநாடென்று கூறத்தகும் என்பது விரிவு.

10.ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை இல்லாத நாடு

(ப.) வேந்தமை - அரசன் தங்கி, வில்லாத - இராத, நாடு - நாடேயாயினும், ஆங்கமை வெய்திய - ஏழைகளமர்ந்தோங்கி வளரப்பார்க்கும், கண்ணும் - பார்வைக்கு, பயமின்றே - யாதொரு பயமுமில்லையா மென்பது பதம்.

(பொ.) அரசன் தங்கியிராத நாடேயாயினும் ஏழைகள் அமர்ந்தோங்கி வளரப்பார்க்கும் பார்வைக்கு யாதொரு பயமுமில்லையாம் என்பது பொழிப்பு.

(க.) தங்களை பாதுகாக்கும் அரசனில்லாத நாடேயாயினும் ஏழைகளையோங்கி வளரச்செய்யும் பார்வை நாட்டாருக்கிருக்குமாயின் யாதொரு பயமும் இராதென்பது கருத்து.

(வி.) முற்பாடலில் பயிறுகளை வோங்கும்படி கருதுவோர் தங்களை யொத்த மநுமக்களில் ஏழைகளாயுள்ளோரும் ஓங்கவேண்டுமெனக் கருதல் வேண்டுமென்று கூறியுள்ளவற்றை அநுசரித்தே ஆங்கமை வெய்தியக் கண்ணென்று ஏழைகளை ஓங்கிவளரச் செய்யும் யீகையாளரும் வேளாளருமாகிய உழவாளிகள் வாழும் நாட்டிற்கு அரசனில்லாத காலத்தும் பயமில்லையென்பது விரிவு.

42. அரண்

இதுவே நகரத்தின் சிறப்பையும் அவை அமையவேண்டிய நிலையையும் அவ்விடம் அமைவோர் செயலையும் விளக்கி நாட்டிற்குப் பேராதரவாகும் நகரமாம் அரணை விளக்குகின்றார்.