பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/762

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

752 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) பேரறிவினால் ஆய விருத்தியின் பயன் யாதெனில் மெய்ப் பொருளைத் தன்னிற்றானே கண்டடைவதாகும். அங்ஙனமின்றி யாவர்பாற் சென்றபோதினும், கேட்டபோதினும் விளங்கா நிற்பது அறிவின் குறைவும் மெய்யுள் மெய்ப்பொருளை கண்டடைவதே அறிவின் விருத்தியாம் என்பது விரிவு.

4.எண்பொருளவாகச் செலச்சொல்லி தான் பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

(ப.) எண்பொருள் - எண்ணும்பொருளெது, வாகச் - அதுவாக, செலச்சொல்லி - கண்டுரை யாடுவதுடன், தான் பிறர்வாய் - தானும் அந்நியர் நாவினின்று எழூஉம், நுண்பொருள் - அரிய பொருளை, காண்ப - கண்டுத் தெளிவதே, தறிவு - பேரறிவாம் என்பது பதம்.

(பொ.) எண்ணும் பொருளெது அதுவாகக்கண்டு உரையாடுவதுடன் தானும் அன்னியர் நாவினின்று எழூஉம் அரிய பொருளைக்கண்டுத் தெளிவதே பேரறிவாம் என்பது பொழிப்பு.

(க.) பொருளெதுவது என்று தன்னிற்றானே கண்டு உரையாடுவதோடு அன்னியர் ஓதும் அரிபொருளை ஆய்ந்தமைவதே அறிவாம் என்பது கருத்து.

(வி.) பொருளென்றாலெப் பொருளென்றும், அது என்றால் எதுவென்றும், அவர் என்றால் எவரென்றும் எதிர்மொழி எழுவதே இயல்பாதலின் மெய்ப்பொருளெது என்றாராயுமிடத்து எண்ணும் பொருளே அதுவாதலின் அவற்றை மறைக்கும் முக்குற்றங்களை அகற்றும் நுண்ணிய பொருளைக் கேட்டதுவாக நிற்றலே அறிவாம் என்பது விரிவு.

5.உலகந் தழீ|ய தொட்ப மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.

(ப.) உலகந் - உலகத்தில் தோன்றுவதற்கும், தழீஇய - கெடுவதற்கும், தொட்ப - ஒப்பாக, மலர்தலுங் - விரிதலும், கூம்பலு - குவிதலும், மில்ல - இல்லாததே, தறிவு - அறிவென்னப்படுமென்பது பதம்.

(பொ.) உலகத்தில் தோன்றுவதற்கும் கெடுவதற்கு ஒப்பாக விரிதலும் குவிதலும் இல்லாததே அறிவென்னப்படும் என்பது பொழிப்பு.

(க.) உலகத்தில் தோன்றும் பொருட்கள் யாவும் க்ஷணத்திற்குச்க்ஷணம் அழிந்துகொண்டே போவது இயல்பாதலின் கண்டறியும் அறிவோ அவ்வகை அழியாது என்பது கருத்து.

(வி.) நினைத்தலும் மறத்தலும் நிற்றலும் விரிதலும் நிதானித்தலும் கெடுதலுமாய எண்ணங்கள் யாவும் அறிவென்னும் பொருளைப் பெறாவாம். அஃது உலகத்தில் தோன்றி தோன்றி க்ஷணத்திற்கு க்ஷணம் அழிந்து கொண்டேபோகும் பொருட்களுக்கு ஒப்பனையாகும் அத்தகையென்றுங் கெடாது எண்ணு மெய்ப்பொருள் விரித்தலும் குவிதலும் அற்று அதுவாய் நிற்பது அறிவென்னப்படும் என்பது விரிவு.

6.எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.

(ப.) துலக - உலகமக்கள், துறைவ - அடையும் விருத்தி, எவ்வ - எவ்வெவ்வகையோ, டவ்வ - அவ்வவ்வகையே, முலகத்தோ - உலகத்தோடு, தறிவு - அறிவும், துறைவ - விருத்தியடையுமென்பது பதம்.

(பொ.) உலகமக்களடையும் விருத்தியெவ்வகையோ அவ்வகையே உலகத்தோடு அறிவும் விருத்தியுடையும் என்பது பொழிப்பு.

(க.) உலகமக்கள் எவ்வகையால் விருத்தி அடைகின்றனரோ அவ்வகையே உலகத்தில் அறிவும் விருத்தியடையும் என்பது கருத்து.

(வி.) கல்வி விருத்தியிலோ கைத்தொழில் விருத்தியிலோ சுயக்கியான விருத்தியிலோ உலகமக்கள் எவ்வகையாய விருத்தியடைகின்றனரோ அவ்வவ்வகையே உலகத்தில் அறிவும் விருத்தியடையும் என்பது விரிவு.