பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

758 / அயோத்திதாசர் சிந்தனைகள்

- வல்லபமறிந்து, தேர்ந்து கொளல் - சேர்த்துக்கொள்ளல் வேண்டுமென்பது பதம்.

(பொ.) தன்மநெறியை உணர்ந்து தன்னிலும் விவேகமுதிர்ந்த விவேக மிகுத்தோராம் நேயரது வல்லபமறிந்து சேர்த்துக்கொள்ளல் வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) அரசன் தன்மநெறி ஒழுக்கந் தவிராது தன்னிலும் விவேகமிகுத்தப் பெரியோரை சேர்ந்து வாழ்கவேண்டும் என்பது கருத்து.

(வி.) அரசனானவன் அறிவுடையவனாகி தன்மநெறியிலும் ஒழுக்கத்திலும் சீர்பெற்றிருப்பினும் தன்னிலும் மேலாய விவேகமிகுத்தோரது கேண்மெய் இருந்தே தீரல்வேண்டும் என்பது விரிவு.

2.உற்றநோய் நீக்கி யுறா அமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

(ப.) உற்றநோய் - தோன்றியுள்ள துக்கங்களை, நீக்கி - அகலச்செய்து, யுறா அமை - இனியேது மவைபோன்ற துக்கங்களணுகாது, முற்காக்கும் - முன்னாலோசனை சொல்லக்கூடிய, பெற்றியார் - மேன் மக்களை, பேணிக்கொளல் - தெரிந்து சேர்த்துக் கொள்ளவேண்டுமென்பது பதம்.

(பொ.) தோன்றியுள்ள துக்கங்களை அகலச்செய்து இனியேதும் அவை போன்ற துக்கங்கள் அணுகாது முன் ஆலோசனை சொல்லக்கூடிய மேன்மக்களை தெரிந்து சேர்த்துக்கொள்ளல் வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) தனக்குத் தோன்றியுள்ள துக்கங்கள் அகலவும் இனி அத்தகைய துக்கங்கள் அணுகாமல் காக்கவும் முன் ஆலோசனைக் கூறும் விவேகிகளை சேர்த்துக்கொள்ளல் வேண்டும் என்பது கருத்து.

(வி.) அரசனுக்குத் தோற்றியுள்ள துக்கங்கள் யாவும் அகலத்தக்க ஆலோசனைகளையும் அத்தகைய துக்கங்கள் இனி அணுகாதிருக்கும் ஆலோசனையும் ஆய்ந்து கூறக் தக்கப் பெரியயோர்களாம் விவேக மிகுத்தோரை சேர்ந்து வாழ்கவேண்டும் என்பது விரிவு.

3.அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரை
பேணி தமராக் கொளல்.

(ப.) அரியவற்று - அரசன் தான் தேடியுள்ள சிறந்த பொருட்கள், ளெல்லா - யாவற்றினும், மரிதே - மேலாய சிறந்த பொருள் யாதென்னிலோ, பெரியாரை - விவேகமிகுத்தோரை, பேணி - தேடி, தமராக்கொளல் - அவர்களை தன்னவர்களாக சேர்த்துக்கொள்ளுவதேயாமென்பது பதம்.

(பொ.) அரசன் தான் தேடியுள்ள சிறந்த பொருட்கள் யாவற்றினும் மேலாய சிறந்தபொருள் யாதென்னிலோ விவேக மிகுத்தோரை தேடி அவர்களைத் தன்னவர்களாகச் சேர்த்துக் கொள்ளுவதேயாம் என்பது பொழிப்பு.

(க.) அரசன் தேடிவைத்துள்ள சிறந்த பொருட்கள் யாவற்றினும் விவேகமிகுத்த பெரியாரை சேர்த்து வாழ்தலே மேலாய சிறப்பாம் என்பது கருத்து.

(வி.) அரசனானவன் தனக்கென்று தேடி வைத்துக்கொள்ளும் தனச்செல்வம், தானியச்செல்வம், மக்கட்செல்வம், மனைச்செல்வம், சுற்றச் செல்வமாம் அரிய பொருட்கள் யாவற்றினும் விவேகமிகுத்தப் பெரியோரைத் தெரிந்து அவரைத்தன் சுற்றத்தாரில் ஒருவராக சேர்த்துக் கொள்ளுதலே மிக்க சிறப்பாம் என்பது விரிவு.

4.தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மெயு ளெல்லாந் தலை.

(ப.) தம்மிற் - தனதறிவிற்கு மேற்பட்ட, பெரியார் - விவேகமிகுத்தோரை, தமரா - தமது சுற்றத்தாரிலொருவராகக் கொண்டு, வொழுகுதல் - நல்வாழ்க்கைப்புரிதல், வன்மெயு - தனது திடச்செயல், ளெல்லாந் - யாவற்றிற்கும், தலை - முதலதாமென்பது பதம்.