பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 763


(பொ.) களங்கமற்ற மனமும் குற்றமற்றச் செயலுமாகிய இவ்விரண்டும் உடையவனது குடும்பத்தின் நல்லொழுக்கமானது சிதறாது வந்து கூடும் என்பது பொழிப்பு.

(க.) மனமாசில்லாமலும் செய்தொழிலில் யாதொரு குற்றம் வாராமலுமிருப்போன் குடும்பத்தில் முடிக்குங் காரியங்கள் யாவும் முட்டின்றி முடியும் என்பது கருத்து.

(வி.) நல்லொழுக்கமுள்ள குடும்பத்தில் பிறந்தவன் நற்குணமுடைய வனாகவும் நற்செயல் புரிபவனாகவே விளங்குவான், அவன் தொடுத்து முடிக்கும் நற்காரியங்கள் யாவும் சுபமாகவே முடியும், அவனைச் சேர்ந்தோர்களும் சுகசீவியாவார்கள் என்பது விரிவு.

6.மனத்தூயார்க் கெச்ச நன்றாகு மினத்தூயார்க்
கில்லை நன்றாகா வினை.

(ப.) மனத்தூயார் - இதய சுத்தமுள்ளோர், கெச்ச - எடுக்கு முயற்சிகள் யாவும், நன்றாகு - நல்லதாகவே முடியும், மினத்தூயார் - குடும்பத்தில் நல்லொழுக்கமுடையவர்களோ, வினை - தாங்கள் முடிக்குஞ் செயல்கள் யாவும், நன்றாகு - முடியா தென்று சொல்லுதற்கு, இல்லை - இல்லாமலே முடியுமென்பது பதம்.

(பொ.) இதய சுத்தமுள்ளோர் எடுக்கும் முயற்சிகள் யாவும் நல்லதாகவே முடியும், குடும்பத்தில் நல்லொழுக்கம் உடையவர்களோ தாங்கள் முடிக்குஞ் செயல்கள் யாவும் முடியாதென்று சொல்லுதற்கில்லாமலே முடியும் என்பது பொழிப்பு.

(க.) மனக்களங்கமற்றோர் எடுக்கும் முயற்சி முட்டின்றி முடிவதுபோல நல்லொழுக்கமுள்ள குடும்பத்தோரெடுக்கும் முயற்சி முடியாதென்று சொல்லுதற்கில்லாமலே முடியும் என்பது கருத்து.

(வி.) இராகத்துவேஷ மோகங்களென்னுங் காமவெகுளி மயக்கங்களாம் மனமாசகன்ற மேலோர் எடுக்குஞ் செயல்கள் யாவும் இடையூறின்றி முடிவனபோல் ஓர் குடும்பத்தோர் நல்லூக்கம் நன்முயற்சி நற்கடைபிடியாய நல்லொழுக்கத்தில் வாழ்க்கை புரிவார்களாயின் அவர்கள் எடுத்துச் செய்யும் நன்முயற்சிகளும் முடியாதென்று கூறுவதற்கின்றி முடிவதோடு அவர்கள் சந்ததியோரும் நல்லொழுக்கச் செயலையே நாடி நிற்பர். தீயொழுக்கக் குடும்பத்தோராய சிற்றினத்தோரோ இவற்றிற்கு மாறுபட்டே நிற்பர் என்பது விரிவு.

7.மனநல மன்னுயிர் காக்கு மினநல
மெல்லாப் புகழுந் தரும்.

(ப.) மனநல - மனத்தின் களங்கமற்ற நிலையானது, மன்னுயிர் - தன்னுயிரைப் போல் மன்னுயிரையும், காக்கும் - ஆதரிக்கும், மினநல - குடும்பத்தின் நல்லொழுக்கச் செயலானது, மெல்லாப்புகழு - இகபர சகல கீர்த்தியையும், தரும் - கொடுக்குமென்பது பதம்.

(பொ.) மனத்தின் களங்கமற்ற நிலையானது தன்னுயிரைப்போல் மன்னுயிரையும் ஆதரிக்கும். குடும்பத்தின் நல்லொழுக்கச் செயலானது இகபர சகல கீர்த்தியையுங் கொடுக்கும் என்பது பொழிப்பு.

(க.) மனமாசற்ற அறவோர் தன்னுயிரைப்போல் பிறவுயிரையும் காப்பர் நல்லொழுக்கக் குடும்பத்தோரோ இகபரத்தில் சகல புகழும் பெற்று வாழ்வார்கள் என்பது கருத்து.

(வி.) இதய சுத்தமுண்டாகித் தண்மெயுற்ற மேலோர் சருவ சீவர்களையும் தன்னுயிர்போல் காத்து புகழடைவார்கள். இனநலமாகும் நல்லொழுக்கக் குடும்பத்தோர்களோ இகத்தில் வாழும் மக்களாலும் பரத்தில் வாழுந் தேவர்களாலும் புகழப்படுவார்கள். மனமாசுற்ற சிற்றினத்தானோ தன்னைச் சார்ந்த சகலரையுங் கெடுப்பான். சகல கேடும் நிறைந்து தீயொழுக்கமுள்ள குடும்பமாம் சிற்றினத் தோரால் சருவ சீவர்களுங் கெட்டழிவதுடன் பல்லோரால் இகழவும் படுவார்கள் என்பது விரிவு.