பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/774

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

764 / அயோத்திதாசர் சிந்தனைகள்


8.மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநல மேமாப் புடைத்து.

(ப.) மனநல - மனமாசற்று, நன்குடைய - சுகச்சீரை, ராயினுஞ் - பெற்றுள்ள வனாயிருப்பினும், சான்றோர் - அறஹத்துக்களாகிய சாந்தரூபிகளுக்கு, கினநல - நல்லொழுக்கமுற்றக் குடும்பத்தின் மீதிலேயே, மேமாப் - மாறா, புடைத்து - நோக்கமுடைத்தாகுமென்பது பதம்.

(பொ.) மனமாசற்று சுகச்சீரைப்பெற்றுள்ளவனாயிருப்பினும் அறஹத்துக்களாகிய சாந்தரூபிகளுக்கு நல்லொழுக்கமுற்றக் குடும்பத்தின் மீதிலேயே மாறா நோக்கமுடைத் தாகும் என்பது பொழிப்பு.

(க.) சாந்தரூபிகளாகிய மேன்மக்கள் மனமாசற்ற ஒருவனைவிட நல்லொழுக்க மிகுத்த நற்குடும்பத்தையே மேலாகக் கருதுவார்கள் என்பது கருத்து.

(வி.) சற்சங்கமாம் புத்த சங்கஞ் சேர்ந்த ஒருவன் நன்மனசுடையோனாக விளங்கினபோதினும் மேலோர்களாகிய சான்றோராம் அறவணவடிகளவர்களை மிக்க கருத மாட்டார்கள். நற்செயல், நல்லூக்கம், நற்கடைபிடியில் ஒழுகும் நல்ல குடும்பத்தோரையே மிக்க கருதுவார்கள். அவைபோல் தீயவனொருவனை மேலோர் கண்டிடினும் ஒருகாற் காண்பர், தீய குடும்பமாம் சிற்றினத்தோரைக் கண்ணெடுத்தும் பாரார்கள் என்பது விரிவு.

9.மனநலத்தி னாகு மறுமெ மற்றஃது
மினநலத்தி னேமாப் புடைத்து.

(ப.) மன நலத்தி - நன்மனச்செயலின் பயனாயது, னாகுமறுமெ - பின்னரெடுக்குந் தேகத்தால் விளங்கிப்போம், மற்றஃது - அவையே தென்னிலோ, மினநலத்தி நல்லொழுக்கக் குடும்பத்தில், னேமாப் - மாறாது தோற்றலே, புடைத்து - உடையதாமென்பது பதம்.

(பொ.) நன்மனச் செயலின் பயனாயது பின்னரெடுக்குந் தேகத்தால் விளங்கிப்போம் அவையேதென்னிலோ நல்லொழுக்க குடும்பத்தில் மாறாதோற்றலே உடையதாம் என்பது பொழிப்பு.

(க.) நல்லொழுக்க மனமுடையவனாகிய பயன் நல்ல குடும்பத்தில் மறுமெய் எடுத்தலால் விளங்கும் என்பது கருத்து.

(வி.) சகலருக்கும் உபகாரியாக விளங்கும் ஒருவன் மரணமடையினும் பின்னரெடுக்கும் பிறவி நற்குடும்பத்திலேயே தோன்றி நற்பயனையே விளக்குவான். அவைபோல் தீயச் செயலிலொழுகுவோன் மரணமுறினும் தீயக்குடும்பமாம் சிற்றினத்திலேயே பிறந்து முன்விட்டு தோன்றிய தீவினைகளையே விளைவிப்பான் என்பது விரிவு.

10.நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி
னல்லற் படுவதூஉ மில்.

(ப.) நல்லினத்தி - நல்லொழுக்கக் குடும்பத்தை, னூங்கு - சேர்ந்து வாழ்வதினும், துணையில்லை - வாழ்க்கையுதவி வேறில்லை, தீயினத்தி - தீயொழுக்கக் குடும்பத்தைச்சார்ந்து, படுவதூஉ - அனுபவிக்கும், னல்லற் - துன்பத்தினும், மில் - வேறு துன்பமில்லையென்பது பதம்.

(பொ.) நல்லொழுக்கக் குடும்பத்தைச் சேர்ந்து வாழ்வதினும் வாழ்க்கையுதவி வேறில்லை, தீயொழுக்கக் குடும்பத்தைச் சார்ந்து அநுபவிக்குந் துன்பத்தினும் வேறு துன்பமில்லை என்பது பொழிப்பு.

(க.) நல்லினத்தை சார்ந்து வாழ்வதினுஞ் சுகம் வேறில்லை. தீயவினத்தைச் சார்ந்து வாழ்வதிலுங் கேடு வேறில்லை என்பது கருத்து.

(வி.) நற்செயல்களையே நோக்கிச் செய்வோர்களும் நன்மார்க்கத்தையே கண்டு நடப்போர்களும், நல்வாய்மெயே அறிந்து பேசுவோர்களும், நன்னோக்கமே கண்டு நிலைப்போர்களும், நல்லவர்களாகவே சகல சீவர்களுக்கும் விளங்குவோர்களும், நற்கடைபிடியே சாதனமாக ஒழுகு வோர்களுமாய நற்குடும்பத்தோரையே நல்லினத்தோரென்றும் மேன்மக்க ளென்றுங் கூறப்படும். இத்தகைய இனத்தைச் சேர்ந்து வாழ்வதே சிறப்பாம்.