பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 91

 

117. சங்கைத் தெளிவோடு ஜைநரின் சித்தாந்தங்களிற் கண்டதை தமிழருக்கறைவாம்.

வினா : பத்ராதிபரே: 1913ம் வருடம் ஜூலை மாதம் 30ம் நாள் வெளியிட்ட சங்கைத் தெளிவின்கண் ஜைந, பெளத்த, யதார்த்தவேற்றுமையின் தோற்றம் யாதென்றற்கு பௌத்தத்தினின்றும் நெருங்கத் தோன்றியது ஜைநம் என்றீர். திரிக்குறளை ஆராய்ந்தவர்கட்கு ஜைநசமய விசாரணைக் குறைவாதலின் ஜைநம் வேறு பெளத்தம் வேறென நினைத்து ஜைநருடையதல்ல வென்றாரென்றீர். இஃதால் ஜைநமும் பௌத்தமும் ஒன்றென்றே தமதபிப்பிராயம் நன்கு விளங்குகின்றதாயினும் 1913ம் வருடம் ஆகஸ்டு மாதம் 27ம் நாள் வெளிவந்த சஞ்சிகையின் கண் ஜைநசமய ஸித்தாந்தத்திற்குத் தலைப்பில் வரைந்துள தமதபிப்பிராயத்தை நோக்குழி அன்பர்காள் ஜைந சமய சித்தாந்தத்தை யான் வெளியிடுவதாயின் ஜைநவன்பர்கட்கு மனத்தாங்கலுண்டாமென்றெண்ணி இதுவரை வெளியிடாதிருந்தோம். சரித்திரவாராய்ச்சியுள்ளோர் கண்டு தெளிவீர்களாக என்றதால் ஜைநர்கள் மனத்தாங்கலடையும் படியான விடயங்கள் தங்களிடம் எவ்வித ஒவ்வாநெறி நிறைந்த போலி நூலிருக்கின்றதோ அதை யுணர்ந்திவ்வாறெழுதினீரோ அறிகிலேன். குற்றமிருக்கின் சுட்டிக்காட்டு தலுத்தமர்க்கழகாதலின் எடுத்துறைத்தல் வேண்டும். மனத்தாங்கல் கொள்ளற் சினந்தவிர்த்தோர் கழகன்றே சினந்தவிர்த்தோர் யாவர். ஜிநமுனிவர்களன்றோ. இஜ்ஜிந முனிவர்களடியார் ஜைநர்களன்றோ ஆதலின் மனத்தாங்கல் திணைத்துணையுங் கொள்ளார் கொள்ளார் கொள்ளார்.

ஆதிசக்ரவர்த்தி உபாத்தியாயர் திருமலை.

விடை : அன்பரே! ஆகஸ்டு மாதம் 27ம் நாள் நமது பத்திரிகையில் வெளியிட்டுள்ளக் குறிப்பு யாதோவென்னில் பத்திரிகை நடாத்து மாரம்பத்தில் சரித்திரவாராய்ச்சியுள்ள சில பெரியோர்கள் ஜைநசித்தாந்தத்தைப்பற்றிக் கேட்டுக்கொண்டதின் பேரில் நாம் பாகுபலி நாயனார் மறுகர் தேவரத்ன நாயனாருக்கெழுதிகேட்க அவரும் தாங்களெழுதியுள்ளக் கருத்திற்கிசைய சுருக்கமாக சிலதெழுதியிருந்தார். அவற்றை பத்திரிகையில் வெளியிட உத்தேசித்திருக்குங்கால் சென்னையிலுள்ள சில ஜைனவன்பர்கள் கூடி வெங்கிட்டரமண வையரென்பவரைக் கொண்டு அசோதர காவிய மென்னுமோர் ஜைநசித்தாந்தம் வெளியிட்டு ஐயரவர்களால் நம்பால் ஒரு புத்தகம் வரப்பெற்றவற்றை நோக்குங்கால் புத்தரைப்போலவே ஒருவர் பிறந்தார் புத்தரைப்போலவே ஞானம் போதித்தாரென்னுங் கற்பனைகள் மிகுந்திருந்து கண்டு தேவரத்ன நாயனார் அனுப்பியுள்ளதைப் பத்திரிகையில் வெளியிடின் சென்னையிலுள்ள சில ஜைநவர்களுக்கு மனத்தாங்கலுண்டா மென்றும் சென்னையிலுள்ளோர் வெளியிட்டுள்ளதைப் பத்திரிகையில் பிரசுருக்கில் வெளிதேச ஜைநர்களுக்கு மனத்தாங்கலுண்டாமென்றும் விடுத்து தற்காலம் ஜைநருள் ஒருவராகிய தாமே வெளிதோன்றி எழுதியுள்ளபடியால் சரித்திரக்காரர் தெரிந்துக்கொள்ளுமாறு குறிப்பிட்டு வெளியிட்டுள்ளோம்.

- 7:16; செப்டம்பர் 24, 1913 –
 

118. ஓம் என்னும் மொழி

வினா : "ஓம்" என்னு மீரட்சரம் ஒரு மொழியா? மொழியாயின் அதன் பொருளென்ன அதனை ஒருவன் உச்சரிப்பதால் பயனென்ன.

நா. பஞ்சநாதன், வேலூர்.

விடை : அன்பரே! தாம் வினாவிய சங்கை மிக்க விசேஷித்ததன்றாம். "ஓம்" என்னுமீரட்சரம் ஓர் மொழியுமாகாவாம். அதற்கோர்பொருளுங் கிடையாவாம் அதனை உச்சரிக்கும் மக்களுக்கோர் பயனுந்தாராவாம். அரோகரா அரோகரா என்னும் பொருளற்ற வெறுமொழிபோல் இதுவுமோர் குறைச்சொற்கிளவி முதல் மொழியற்றத் தொடரட் சரங்களென்னப்படும்.
அதாவது அறிவோம், தெரிவோம், முடிப்போம், எடுப்போம், நடப்போம், வருவோமென்னு மீருகெடாது துடர்ந்தொலிக்கும் இருவடி வேயாம்.