பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


இத்தகைய பஞ்சபாதகங்களையகற்றி வாழவேண்டுமென்பது புத்த சங்கத்தோர் முதற்றியானமாகும். இவ்வகை தியானத்தையும் ஒழுக்கத்தையுங் கண்டிப்போர் பஞ்சபாதகர்களேயாவர்.

அப்பஞ்சபாதகர்களுக்குப் பக்கத்துணையும் பாதுகாவலும் பெரும்புகழ் கூறுவோருமாவோர் தசபாவ சம்பிரதிகளேயாவர். ஆதலின் நமதன்பார்கள் முன்பின் ஆராய்ச்சியின்றி பெரியோர்களையும் மகா ஞானிகளையுந் தூஷித்து வீண்டம்பமூட்டிப் படாடம்பங்காட்டுதற் றங்களைப் பாழாக்கி விடுமென் றறிவார்களாக.

சொரூபசாரம்

பெற்றபேரின்பப் பெரியோர் சரித்திரத்தை / குற்றமென நாடுங் கொடியோர்கள் - பற்றாக் கோசாகரப்புழுபோல்கோடானகோடி சென்ம / மாசாவரென்றே மதி.

நீதிவெண்பா

தீயவர்பாற்கல்வி சிறந்தாலு மற்றவரைத் / தூயவரெண்ணியே துன்னற்க - சேயிழையே
தண்ணொளியாமாணிக்கஞ் சர்ப்பந்தரித்தாலு / நண்ணுவரோ மற்றதனை நாடி.

-1:45; ஏப்ரல் 22, 1908

19. சுயராச்சியம்

சென்ற மே மாதம் 31ம் தேதி வெளிவந்த சுதேசபானுவென்னும் பத்திரிகையில் ஓர் சுதேசாபிமானி எனக் கையொப்பமிட்டு வரைந்துள்ளக் கடிதத்தைக் கண்டு மிக்க வியப்புற்றோம். காரணம் - கடவுளை நம்பி சுதேசியத்தை எதிர்நோக்குவோருக்கு முயற்சி வேண்டுவதில்லை முயற்சியே முழுநம்பிக்கை யுள்ளோர்க்கு கடவுள் வேண்டியதில்லை. கடவுளும் வேண்டும் முயற்சியும் வேண்டுமென்போர்கள் நிலையற்ற நெஞ்சர்களேயாவர். நிலையற்ற நெஞ்சுடையவர்களாயின் பலகற்றும் பாழென்பதேயாம். இச்சுதேசாபிமானி யார் கோறுங் கடவுள் வேறு பரதேசியர் கோறுங் கடவுள் வேறாமோ.

இருவருக்கும் ஒரே கடவுளாயின் சுயராட்சியம் இருவருக்கும் பொதுவேயாம். இருவருக்கும் வேறுவேறு கடவுளாயின் இருகடவுளர்க்கும் போருண்டாகி (டக் ஆப் வார்) ஒருவருக்கொருவர் இழுத்து யார் வல்லாரோ அவரே ஜெயம் பெறுவர். ஆதலின் நமது சுதேசாபிமானியார் சுயமுயற்சியற்று கடவுளை நோக்கி கையேந்துவரேல் பரதேசிகள் யாவரும் பலமுயற்சியால் பாதாளலோகத்தையும் பிடித்துக் கொள்ளுவார்களென்பது திண்ணம். நமதன்பர் சுதேசவிருப்பமட்டுங் கொண்டு சுதேசிகளின் ஒற்றுமெய்க் கருதாதிருப்பதே தமிழன் பத்திரிகையின் திகைப்பாம்.

- 1:51; சூன் 3, 1908

20. நால்வர் சரித்திரம்

ம-அ-அ-ஸ்ரீ தமிழன் பத்திராதிபருக்கு வந்தனம். ஐயா இதனடியில் யான் வரையும் வினாவைத் தங்கள் பத்திரிகையில் விடுத்து உண்டாய சங்கையைத் தெளிவிக்க கோருகின்றேன்.

அதாவது இவ்வாரம் சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த ஓர் பிரசங்கத் திற்குப் போயிருந்தபோது இலாயவாசி பரிவேலையாளர் பழைமொழிபோல் புத்தபிரானை வைதசங்கதிகளைக் கேட்டு வருந்தி வெளிவருங்கால் அவ்விட முள்ள அன்பர்களிற் சிலர் அப்போலிப் பிரசங்கியாரை நோக்கி அதிகமுங் கொஞ்சமுமில்லா அற்பப் பிரசங்கியாரே, நீவிர் பெரியோனெனும் வேஷம் போட்டு பெரியோரை தூஷிப்பது பெருமெயாமோ என்றார்கள்.

அவ்வாக்கின் மணமறியா போலிப் பிரசங்கியார் நால்வர்களின் வாக்கை நீங்கள் நம்புவதாயிருந்தால் நாம் அவ்வகையே தூஷிப்போம். நீங்கள் நம்பாவிடில் தூஷிக்கமாட்டோமென்று உறுதி கூறினர். ஆதலின் பத்திராதி பரவர்கள் அன்புகூர்ந்து அப்பர், சுந்திரர், சம்மந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர்கள் சரித்திரம் பொய்யா அன்றேல் மெய்யா என்பதை விவரித்துக் கூறும்படிக் கோருகின்றேன்.

சி.வீ. சதாசிவன், சென்னை.