பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /33


48. பிள்ளைகளை பயத்தால் வளர்க்க வேண்டுமா நயத்தால் வளர்க்க வேண்டுமா

பிள்ளைகளை வளர்ப்பதற்கு பயமும் நயமும் இரண்டும் வேண்டும். அதாவது, "குரங்கை சீர்திருத்தக் கோலும் பிள்ளைகளை சீர்திருத்தப் பிரம்பும்" வேண்டுமென்னும் பழமொழிக்கிணங்க பூர்வகாலத்தில் பிள்ளைகளை விடியர் காலத்திலெழுப்பி கால் கரஞ் சுத்திசெய்து பௌத்தர்களால் பள்ளிக்கூடங் களென வழங்கிவந்த கலாசாலைகளுக்கு அனுப்புவதியல்பாம்.

அப்பள்ளிக்கூடங்களிலும் முதல் வந்தவனுக்கு ஸ்ரீ என்று அடியில்லா மலும், இரண்டாவது வந்தவனுக்கு ஒரு அடி , மூன்றாவது வந்தவனுக்கு இரண்டடியென்று ஒவ்வொருவரை அடிப்பது வழக்கமாகும் அவ்வடிகளுக்கு பயந்துகொண்டே சிறுவர்கள் அதிகாலையில் எழுந்து பள்ளிக்கூட மேகுவது வழக்கமாகும். அவற்றுள் பிள்ளைகளை பத்து மணிக்கு புசிப்புக்கனுப்பி அரைமணி நேரத்தில் வரச்செய்வதும் மறுபடியும் இரண்டு மணிக்குப் புசிப்புக்கனுப்பி வரச் செய்வதும் மாலை ஆறு மணிக்குப் பள்ளிக்கூடம் விடுவது வழக்கமாகும். இத்தகைய விடுக்கப்போதனைகளினால் பிள்ளை களுக்குக் கெட்ட சாவகாச சேர்க்கைகளில்லாமலும், பெரியோர்களின் விவகாரங்கள் ஒன்றுந் தெரியாமலும் இலக்கண விலக்கிய நூற்களில் சிந்தை யுடையவர்களாகியும் நீதி நூற் பழக்கமுடையவர்களாகியும் ஓலைச்சுவடியைக் கையிலேந்தி வாசிக்க முயலுமென்று துணிந்து கூறலாம்.

வித்தையிலும் புத்தியிலும் பொருள் சம்பாதிக்கும் அறிவு விருத்தியிற் செல்லாது பொய்யாலும், வஞ்சினத்தாலும், குடிகெடுப்பாலும் பொருளை சம்பாதிக்கும் பேரவா மிகுத்தப் பெரியோர்கள் பால் பழகும் சிறியோர்களும் அச்செயலைப் பின்பற்றி உலக சீவர்களுக்கு ஒருபகாரமுமின்றி உங்கள் வீட்டிற்கு வந்தால் என்ன கொடுக்கின்றீர்கள், எங்கள் வீட்டிற்கு வந்தால் என்னக் கொண்டுவருவீர்களென்னும் சுயப்பிரயோசன சோம்பேரிகளாகி சுகசீர் கெட்டுப்போகின்றார்கள்.

இத்தியாதி கேடுகளையும் உணர்ந்துவரும் பெரியோர்கள் தாங்களே நீதிநெறியில் நிலைத்து சகல சீவர்களுக்கும் உபகாரிகளாக விளங்குவார் களாயின் தங்கள் சிறுவர்களும் அவ்வழி நிலைத்து சுகவாழ்க்கைப் பெறுவார்கள். அங்ஙனமின்றி பெரியோர்கள் வாழ்க்கையினிடத்தே துற்செயலைப் பெருக்கி வருகின்றவர்கள் தங்கள் சிறியோர்கள் வெளிசேர்க்கையால் கெட்டுப் போகின்றார்களென்பது வீண் வழக்கேயாகும்.

வெளி மக்களுக்கெல்லாம் சுயப்பிரயோசனச் சோம்பேரித் தொழிலைக் கற்பித்து வைத்தவர்கள் தாங்களா அன்னியர்களாவென்று ஆராய்வார் களாயின் தங்கள் சிறுவர்கள் தங்கட் செயலைக் கொண்டே கெட்டழிகின்றார் களென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும். பெரியோர்கள் வித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க் கத்திலும் நிலைத்து சிறியோர்களை நயத்திலும் பயத்திலும் வளர்க்க வேண்டியதே வளர்ப்பாகும். சிறுவயதில் வளைக்கப்படா மூங்கில் பருத்து வளர்ந்த பின் வளையாதென்பது துணிபாம்.

- 4:5: சூலை 13, 1910 -


49. புகையிலை பிடித்தல்

வினா : ஐயா, நமது சாதிபேதமில்லா திராவிடர்களுக்குள்ளும், சாதி பேதம் உள்ள திராவிடர்களுக்குள்ளும் சிலர் பிரேதமெடுத்து சுடலைக்குச் சென்று பிரேதக் கிரியை முடிவு பெற்றவுடன் புகையிலையேனும் அல்லது சுரூட்டேனுங் கொடுக்கின்றார்களே அவை யாதுக்கு. இத்தகைய வழக்கம் பூர்வமுதல் நடைபெற்றதா அன்றேல் நூதன வழக்கமா அவற்றை அடியேனுக்கு விளக்கித் தெளிவிக்க வேண்டுகிறேன்.

வீ. மாசிலாமணி சென்னை .

விடை : அன்பரே, தாம் வினவியுள்ள புகையிலையின் பழக்கம் நூதன மேயாம். பூர்வகாலத்தில் சிலர் புகைபிடித்தாரென்னும் இலை கஜாயிலை