பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

அவன் தனவான், இவன் ஏழை, அவன் பிணியாளன், இவன் சுகதேகியென்னும் பேதாபேதம் பாராது மனுக்களின் ஒழுக்கப்பலனைக் கருதி சத்திய தன்மத்தைப் போதிப்பவர்களே சங்க அற ஆச்சாரியாரவர்களின் வரிசையோராவர்.

அங்ஙனமின்றி ஏது சம்பத்துமில்லா யாசகர்களும், யாதொரு தொழிலுமில்லா சோம்பேரிகளும் மக்களைப் போஷிக்கப் போதிக்கும் யாதொரு வித்தையு மில்லா விவேக சூன்யர்களும், தன்கிராமந் தவிர பக்கத்து கிராமத்திற்குத் தெரியா பாமரர்களும், தன்பாஷையன்றி ஏனைய பாஷையறியா ஏமாளிகளும் யானை ஏறல் வேண்டும் பல்லக்கேறல் வேண்டு மென்னுந் தன்சுகங் கருதும் டம்பாச்சாரிகளும் போகுமிடமெல்லாம் பணம் சேகரிக்க வேண்டுமென்னும் பொருளாசைக்காரர்களுமாகிய ஏதுமில்லாதோர் உலக குருவென்றும் மெய்யறம் நிறைந்த சத்திய சங்கங்களே இத் தேசத்திலில்லாதிருக்க சங்க அற ஆச்சாரிகளென்று வெளிதோன்றுவது கிளாக்கனியை திராட்சக் கனியென்றும் நரிக்குட்டியை மான்குட்டியென்றுங் கூறுவதற் கொக்கும். இதனால் எல்லா முடையான் குருவாகத் தோன்றிய சிறப்பை எல்லாமில்லான் குருவென்று தோன்றி பொருள் சம்பாதிப்பது தங்கள் சுயசீவனத்திற்காக மெய்க்குருவின் பெயரையும் மெய்யறத்தையுங் கெடுப்பதேயாம்.

- 4:10; ஆகஸ்ட் 17, 1910 –


55. கிறிஸ்தவர்களுக்கு ஜாதியுண்டா

வினா : ஐயா, செப்டம்பர் மாதம் வெளியான “நல்லாயன்” பத்திரிகையில் ஜனத்தொகைக் கணக்கெடுக்கவரும் சென்ஸஸ் உத்தியோ கஸ்தர்கள் உங்கள் மதத்தைக் கேட்கையில் “கத்தோலிக்கு மதம்” என்றும், ஜாதியைக் கேட்பார்களானால் உங்கள் உங்களுடைய ஜாதியையும் சொல்லுங்கள் என்று வரைந்திருக்கிறது.

ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் வெளியான “திரு இருதயத் தூதன்” பத்திரிகையில், “பலஸ்தீனுக்கும் ஐரோப்பாவுக்கும் திருயாத்திரையாய்ச் சென்ற இரண்டு இந்தியர்கள்” என்ற தலைப்பின் கீழ் “உரோமை நகர் வத்திக்கான் அரண்மனையில் துரைசாமி ஐயர் கிறிஸ்துவ பிராமணர்களின் தொகை அதிகரிக்கும் படியாகவும், அவர்களின் குடும்பங்கள் செழித்திருக்கும் படியாகவும் அர்ச். பாப்பானவர் ஆசீர்வதிக்கும்படி மன்றாடினார்” எனக் கண்டிருக்கிறது. இதனால் எனக்குத் தோன்றிய சந்தேசங்களாவன: முதலாவது கிறிஸ்தவர்களுக்கு ஜாதியுண்டா? இந்து மதத்திற்கே சொந்த பொருளாயுள்ள ஜாதியைக் கிறிஸ்தவர்கள் அநுசரிக்கலாமா? அப்படி அநுசரிப்பவர்கள் கிறிஸ்தவர்களாவார்களா? இரண்டாவது, பிராமணனா இருந்தவன் கிறிஸ்தவனானபோது அவனைப் பிராமணனென்று அழைக்கலாமா, அப்படிப்பட்டவன் பூணூல் தரித்துக்கொள்ளலாமா? தன் குடும்பங்கள் செழித்திருக்க பாப்பாண்டவரின் ஆசீர்வாதத்தைக் கேட்டவர்கள் மற்ற குடும்பங்களை நினையாமற் போனதென்னை? ஜாதி கிறிஸ்தவர்களாகிய இந்த இரண்டு யாத்திரைக்காரரும் பலஸ்தீனாவிலும் ஐரோப்பாவிலும் யாரிடத்தில் போஜனஞ் செய்திருப்பார்கள்? அப்போது ஜாதி கெடவில்லையா?

பி.கே., சென்னை.

விடை : அதாவது ஓர் இந்து மதத்தைச் சார்ந்தவன் கிறிஸ்தவனாகி விடுவானாயின் அவன் முன்பு அநுசரித்துவந்த சாதியாசாரமும், சமயவாசாரமும் அன்றே ஒழிந்துவிட்டதென்பது திண்ணம். அங்ஙனமின்றி சாதியா சாரமும், சமயவாசாரமும் விடுவதில்லையென்றால் அவனுக்குக் கிறிஸ்தவ னென்னும் பெயர் பொருந்தவே பொருந்தாது. அல்லது சாதியாசாரத்தை மட்டிலும் ஒழிக்காது சமயாசாரத்தை ஒழித்த கிறிஸ்தவனென்பாராயின் சமயத்திற்குக் கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டும், சாதிக்கு மநுதன்மசாஸ்திரத் தையும் பிராமணனையும் பற்றிக்கொண்டுள்ளவராதலின், அவன் முழுக் கிறிஸ்தவராகமாட்டார். அரைக் கிறிஸ்துவரே யாவர். அதாவது, மநுதன்ம சாஸ்திரக்கட்டுப்பாடும் வேண்டும் சாதியாசாரமும் வேண்டுமென்பதில் அரை இந்துவாகவும், கிறிஸ்துவமத ஆசாரமும் வேண்டுமென்பதில் அரைக் கிறிஸ்தவனாகவும் விளங்குகின்றார்.