பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40 /அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

வேண்டியவர்கள் இந்தியர்களின் சாதியாசாரத்தையும், மதாசாரத்தையும் ஒழித்து கத்தோலிக்குக் கிறிஸ்தவன் அல்லது புரோடெஸ்டான்ட் கிறிஸ்தவ னெனக் கூறுவதே கனமாகும்.

அங்ஙனமின்றி மநுதன்ம சாஸ்திரத்தையும், பிராமணரையும் கனஞ் செய்வதற்காய் செட்டிக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவனெனச் சொல்லு வதாயின் கிறிஸ்துவை அவமதிப்பதாகும். இந்துக்களின் சாதியும் வேண்டும், கிறிஸ்துவின் மதமும் வேண்டுமென்னும் இரண்டாட்டிற்கு ஒரு குட்டி போலும். இரண்டெஜமானனுக்கு ஒரு ஊழியன்போலும் திகைத்து கெடாது ஒரே எஜமானனை நாடி உறுதியும் சுகமும்பெற வேண்டுகிறோம்.

“கிறிஸ்தவன்” என்பதினிலக்கணம், அவன் கிறிஸ்து வெனலாகும். அதாவது, கிறிஸ்துவினது கிரீத்தியத்திற் பொருந்தியவன் என்பதாம். அத்தகைய சிறந்த பெயருடன் பொய்யாகிய சாதியாசார பெயரைச் சேர்ப்பது மாணிக்கத்துடன் மண்ணாங்கட்டியைப் பொருந்தலொக்கும்.

- 4:16; செப்டம்பர் 28, 1910-


56. பிணச் சடங்கு

வினா : நமது தேசத்தில் ஒருவர் இறந்தவுடன் கால் விரலையுங் கைவிரலையுங் கட்டிவிட்டு தலைப்பக்கம் விளக்கு கொளுத்தி வைக்கிறார்களே அவை என்ன காரணம்? அதுவுமின்றி பிணத்தை தூக்கிக்கொண்டு போகும் போது கொஞ்ச தூரம் சாணத்தைக் கறைத்துத் தெளித்துக் கொண்டு போகிறார்களே அவை என்ன காரணம்? இவையோடு பாடையில் ஒரு கோழிக்குஞ்சை கட்டி தொங்கவிட்டு போய் சுடலையிலுள்ள வெட்டி யானிடத்தில் கொடுக்கிறார்கள். அல்லது பிணத்துடன் புதைத்து விடுகிறார்களே அவை என்ன காரணம்.

பி.எஸ். அச்சுதானந்தம், திருப்பத்தூர்.

விடை : அன்பரே, தாம் விடுத்த சங்கை மிக்க விசேஷித்ததேயாம். அதாவது, இந்திய தேசமெங்கும் புத்ததன்மம் பரவியிருந்த காலத்தில் பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கினாலுந் துக்க விருத்தியுண்டு. அத் தகைய நான்கையுஞ் செயித்துக்கொள்ளுவதே மாநுஷீக தருமமென வகுத்து சாதுசங்கங்களை போஷித்துவந்ததுடன் தாங்கள் நடாத்திவரும் இல்லற தன்மத்தில் ஒருவன் துக்கத்திற் கேதுவாம் மரணமடைவது இகழ்ச்சி என்றும், மரணத்தை ஜெயித்து பிறவி அறுப்பதே புகழ்ச்சியென்றும் தங்கடங்கட் செயல்களில் மரண விழிவைக்காட்டி வந்தார்கள்.

எவ்வகையிலென்பீரேல் ஒருவன் பிறவியறுக்கும் வழி தேடாது மரண மடைந்தானென்றால் அவன் பாசபந்தக் கட்டறுக்கும் வழி தேடாது மாண்டவனானபடியால் அக்கட்டு மாறாது அவன் பெருவிரல்கள் இரண் டையுஞ் சேர்த்துக் கட்டிவிடுவது வழக்கமாகும். இதை அனுசரித்தே தாயுமானவரும் “நிகளபந்தக் கட்டவிழ்ப்பாரே” என்றும் பாடியிருக்கின்றார்.

மற்றோர் வகையில் தகப்பன் பாசபந்தக் கட்டினை அறுத்து மரணத்தை ஜெயிக்காது மரணமடைந்துவிடுவானாயின் மைந்தன் தனது பிறை முடியை இரக்கிவிட்டு மீசையை சிறைத்துக் கொள்ளுவான். அதாவது, தனது தந்தை மரணத்தை ஜெயித்த ஆண் பிள்ளை ஆகாமல் மரணத்திற்குள்ளாம் வீண்பிள்ளை யானாரே என்பதாம். அதை அநுசரித்தே குணங்குடி மஸ்தான் “மீசையுள்ள ஆண்பிள்ளை சிங்கங்களாயின் என்கூட வெளியினில் வாருங்காணும்” என்றும் பாடியிருக்கின்றார்.

அவன் மரணமடைந்தபோதே சிரவுச்சியிலிருந்த சோதி அவிந்து விடுகிறபடியால், மரணமடைந்தோன் சிரசினருகே தீபமேற்றி வைப்பது வழக்கமாகும்.