பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /51


69. விஷ்ணு அவதாரம்

வினா : ஐயா, தமதரியப் பத்திரிகையிலும், புத்ததன்ம நூற்களிலும் புத்தரென்னும் பெயர் பெற்றவர் மகதநாட்டு சக்கிரவர்த்தித் திருமகனென்றும், நம்மெய்ப்போன்ற மனிதனென்றும், வரைந்திருப்பதைக் காண்கின்றேன் அங்ஙனமிருக்க சில பத்திரிகைகளிலும் புராணங்களிலும் புத்தர் விஷ்ணுவின் அவதாரமென்றும் அவர் அவதரித்து சில வேதாந்த ரகசியங்களை மாற்றிவிட்டாரென்றும் வரைந்திருப்பதைக் காண்கின்றேன். இவ்விருவரைதலுள் எவை மெய்யென்றும், எவை பொய்யென்றும் விளங்கவில்லை. ஆதலின் பத்திராதிபர் அநுபவக் காட்சியுடன் திட்டமாக விளக்கி தெளிவுறுத்த வேண்டும்.

வே. நடராஜர், இராயபுரம்.

விடை : அன்பரே தாம் விடுத்த சங்கை மிக்க விசேஷ சங்கையேயாம். இத்தகைய சங்கைகளே மக்களது மனமாசு கழுஉம். அதாவது, ஒருருவமே மறு உருவமாக மாறுதலை அவதாரிகை என்றம், அவதாரமென்றும் கூறப்படும். தாம் வினவிய அவதாரம் காணாவுருவினின்று காணு முரு வொன்று தோற்றியதென வரைந்துள்ள மொழி அவதாரத்திற்கே அவதானம் நழுவிய நிலையாகும். இவற்றுள் விவேகமிகுத்த மகா ஞானிகளால் வரைந்துள்ள எழுவகைத் தோற்றங்களுள் மக்களினின்று தேவர்கள் தோற்றுவதாகவும் நாளதுவரையில் தோற்றிவருவதாகவும் அநுபவகாட்சியாக வகுத்துள்ளபடியால் தேவர்னின்று மக்கள் தோன்றினாரென்பது முழுப் பொய்யும் விவேகமிகுத்தோர் வாக்குக்கு முற்றும் பிசகேயாம். மனிதன் தனது நல்லொழுக்கத்தாலும், நன் முயற்சியாலும், நற்கடைபிடியாலும், நல்லூக்கத்தாலும், நல்ல மதியாலும், நற்காட்சியாலும் தேவனானானென்பது அனுபவத்திற்கும், காட்சிக்கும் பொருந்தியதாகும். அங்ஙனமின்றி தேவன் மனிதனாகத் தோன்றினான் மனித அவதாரமெடுத்தானென்னில் தேவனென்னும் சிறந்த பெயரற்றுபோம். அறிவு முதிர்ந்த தேவனானானென்னும் சிறப்பு மொழிகெட்டு அறிவு கெட்டு மனிதனானானென்னு முருவகமாகும். மனிதனாம் 6-வது தோற்றத்தினின்று தேவனென்னும் 7-வது தோற்றம் பெறுவதே மிக்க சிறப்பைத்தரும். தேவனென்னும் 7-வது தோற்றத்தினின்று ஆறாவது மனிதனாகத் தோற்றினானென்பது முற்றும் இழிவைத்தரும் மொழியாதலின், கண்காணா விஷ்ணுவென்னும் தேவன் கண்காணும் புத்தராகத் தோன்றினாரென்பது முற்றும் பொய்யேயாம். அவ்வகைத் தோன்றி வேதாந்தங்களை மாறுபடுத்தினாரென்பது அதனினும் பொய்யேயாம்.

காரணமோவென்னில் விஷ்ணுவென்னுமோர் தேவனிருக்கிறா ரென்பதே ஆதாரமற்றக் கதை. அத்தகைய ஆதாரமற்றக் கற்பனா கதா புருஷ தேவனாம் விஷ்ணு பிரத்தியட்சப்பிரமாண அநுபவக்காட்சியாய் சகலமனுக்களுங் காண மனிதனாகப் பிறந்து வளர்ந்து பரிநிருவாணமுற்ற புத்தராகப் பிறந்தாரென்று கூறுங் கூற்று ஞானமற்ற நாவினர் மொழியும், கியானமற்ற சூனியர் வரைவுமென்னப்படும்.

புத்தபிரான் தோன்றிய பின்னரே வேதமென்றும், வேத அந்தமென்றும், மறை என்றும், ஆகமமென்றும், சுருதியென்றும், அவர் போதித்த அருமொழி மூன்றாம் திரிபீட வாக்கியத்தினின்றே தோன்றியுள்ளபடியால் புத்தர் தோன்றி வேதாந்தத்தை மாறுபடுத்தினாரென்று வேறுபட்டப்பொய் வெறும்பொய்யேயாம். ஆதலின் பௌத்த சோதிரர்கள் ஒவ்வொருவருந் தாங்கள் வாசிக்கும் நூற்களில் மனிதனாகத் தோன்றியவன் தனது நீதிநெறி ஒழுக்கத்தாலும் வாய்மெயாலும் தேவனெனத் தோன்றினானென வரைந்திருக்கில் அந்நூலை சிரமேற்றாங்கி அவற்றுள் வரைந்துள்ள நீதிநெறி ஒழுக்கத்தின்படி நடந்து வாய்மெயில் நிலைத்து நிருவாணமுற்று தேவனென்னும் பெயரும் பெற்று மாளா பிறவியின் துக்கமுமற்று நித்தியானந்த பரிநிருவாணமேற்று வாழும்படி வேண்டுகிறோம். அங்ஙனமிராது ஓர் தேவனே மனிதனாக வந்தாரென்றும்,