பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

தான் ஊர்வலத்தில் முன்பு கண்ட பிணியின் துக்கத்திற்கும் மூப்பின் துக்கத்திற்கும், மரணதுக்கத்திற்கும் பிறவியே மூலகாரணமென்றறிந்து அப்பிறவிக்குக் காரணம் அவாவென்றுணர்ந்து அவாவையறுத்தற்காய சத்திய தன்மங்களாம் திரிபேதவாக்கியங்களென்னும் திரிசீல திரிபீடவாக்கியங் களையும், குடும்பிகள் அநுசரிக்கவேண்டிய பஞ்சசீல வாக்கியங்களையும், சங்கத்து சமணர்கள் அனுசரிக்க வேண்டிய அட்டபாக்கிய வாக்கியங்களையும் அருளி தானெவ்வகையாகப் பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு வாய்மெயை உணர்ந்து மாரனென்னும் காமத்தையும், காலனென்னும் மரணத்தையுஞ் செயித்து என்றுங் கெடாத தெய்வகதி பெற்று நித்திய சுகத்தில் நிற்பது போல ஏனைய மக்களுந் தங்களுக்குத் தாங்களே பாபத்திற்காய கூலியாம் மரணத்தைப் பெற்று பிறவிக்காளாகாது புண்ணிய பலனாம் நித்திய சீவனைப்பெற்ற பிறவியை ஜெயிக்கும் வழியில் விடுத்திருக்கின்றார். இதுவே புத்தரது தன்ம சுருக்கமாகும்.
அந்த சுருக்கமோவென்னில் பிறவியாலுண்டாம் சதா துக்கங்களை ஒழித்து சதா வானந்தத்திலிருப்பதே அந்த சுருக்கமாகும். மற்றப்படி. ஆடு, மாடு, குதிரை, கழுதைகளைப்போல் உண்டுழைத்து சாவதுபோல் மக்களும் சாகவேண்டுமென்பது புத்ததன்மமன்று. அத்தகைய சீவராசிகளைப்போல் அஃரிணையில் வகுக்காது மக்களை உயர்திணையில் வகுத்திருக்கின்றார்கள். ஒவ்வோர் மக்களும் பொய்யை ஒழித்து மெய்யரானபோது மெய்கண்ட தேவர்களென்றும் புத்தர்களென்றும் அழைக்கப்படுவார்கள். சித்தார்த்தியவர்கள் செத்து செத்து பிறக்கும் சாவின் துயரத்தை தானே ஜெயித்து புத்தரென்னும் பெயர் பெற்றதுமன்றி உலகெங்குஞ் சங்கங்களை நாட்டி சாகுந் துக்கத்தை நீக்கும் வழிகளை ஊட்டியுள்ளபடியால் அவரை விவேக மிகுத்தப் பெரியோர்கள் பிரபல பஞ்சகாவியங்களில் ஒன்றாம்,
மணிமேகலையில் சாதுயர் நீக்கிய தலைவன் தவமுநி' எனக் கொண் டாடியிருக்கின்றார்கள். பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு வகைத் துக்கங்களைக் கண்டுணர்வதே புத்தன்மத்தின் ஆதியாகும். நான்குவகை துக்கங்களை ஜெயிப்பதே புத்தன்மவந்தமாகும்.
இத்தகைய சத்தியதன்மத்தில் நடக்கும் பாதை நெருப்பின் ஆறும், மயிர் பாலமும் போலுள்ளபடியால் அம்மத்திய பாதையில் நடப்பதற்கு இயலாத சோம்பேறிகளாகிய நாம் நடந்து சென்றவர்கள் போலபிநயித்து சத்தியதன் மத்தைக்கெடுப்பதழகன்றாம். மேற்கருவி சோதனைகளுக்கு உட்கருவி சோதனை பேதமுண்டாகையின் கருவியால் கருத்தினது நிலைகண்டறிவது கஷ்டமாகும். கருத்தினது நிலையில் ஆரூடமென்பது சகலருள்ளத்தில் எண்ணும் எண்ணங்களையும், புறதேசமக்கள் சங்கதிகளையும் தங்கள் ஞானக்கண்ணினால் கண்டு கூறுவதாகும். அதன் சுருக்கங் கண்டுதெளிதற்கு தற்காலத்திய (இப்னாட்டிசமென்னும்) செயலே சான்றாம். கருத்திலுயர்ந்த ஞானிகளின் விழிபட சகலரோகங்களு மகலுமென்பதற்கு தற்காலம் நிறைவேறிவரும் (மெஸ்மரிசமென்னும்) செயலே சாட்சியாகும். இத்தகையத் தற்கால செயல்களையும் பூர்வ ஞானங்களையும் அதனத னுற்பவங்களையும் கண்டறியாது நாங்களும் புத்ததன் மங் கூறவந்தோமென்று வெளிவராது அஷ்டாங்க மார்க்கத்தில் நடந்து சாதனத்தில் லயித்து னிலைத்த பின்னர் சத்தியதன்மத்தைக் கூறும்படி வேண்டுகிறோம்.

- 5:3 ; சூன் 28, 1911 –
 

75. சத்து நீங்கியபின் மனிதன்

வினா : மனிதன் சத்து நீங்கியப்பின் அப்பிணத்திற்குப் செய்யவேண்டிய தென்ன, இரண்டாவது நாள் பால் தெளிக்க வேண்டியதென்ன. பிணமெடுத்து செல்லுங்கால் அரிச்சந்திரன் கல்லை சுற்றவேண்டியதென்ன. பதினாறாவது நாள் கருமாதி செய்யவேண்டு மென்பதென்ன. இவைகள் பூர்வத்திலிருந்து நிறைவேறிவருகின்றதா இல்லையா இவைகளை தெளிவிக்க வேண்டியது.

பா. முனிசாமி, தா. சண்முகம், து. கனகசபை, புதுப்பேட்டை