பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

கல்லறையருகிற் சென்று மேல்மூடியுள்ள சதுரக்கல்லை போர்த்தெடுப்பதை கல்லெடுப்பென்றும் வழங்கி அதை எடுத்துப் பார்த்தவுடன் சிரசில் துவாரங் காணுமாயின் மரணத்தை ஜெயித்து நிருவாணமுற்றார் ஆதிக்குச் சமமானாரென்று ஆனந்தக்கூத்தாடி அவர் சமாதியாய ஆதி தன் மகன்மம் அதாவது கன்ம ஆதியெனக் கூறி ஏழைகளுக்கு அன்னதானம் வஸ்திரதானஞ் செய்து அவ்விடத்திலேயே ஓர் அறப்பள்ளியாம் வியாரங் கட்டி சாது சங்கத்தைச் சேர்த்து ஞானசாதன சமண நிலையில் இருப்பதியல்பாம்.
கல்லை எடுத்துப்பார்த்தவுடன் சிரசில் துவாரந் தோன்றாது சாய்ந்துக் கிடக்குமாயின் வந்தவர்கள் யாவருந் துக்கித்து சமாதியடைந்தாரென்னும் புகழ்ச்சிக்கு வராது செத்தானென்னும் இகழ்ச்சிக்கு வந்தபடியால் இழிவுக்கு போனோமென்பதை மாற்றி இழவுக்குப் போனோமெனக் கூறி அரசபுத்திரனாயின் தனது தந்தை நிருவாணம் பெற்று ஆண்பிள்ளையாகாமல் மரண மடைந்து பிறவிக்கேகும் வீண்பிள்ளையாய் இழிவடைந்தபடியால் தனது முடியைக் கழட்டி எறிந்துவிட்டு மீசையை சிரைத்து இழிவுக்குப் போனோமென சிரசில் நீர்விட்டுக்கொள்ளுவது வழக்கம். உடனே தனது பந்துமித்திரர்கள் கூடி அதே பதினாறாவது நாள் மாலையில் புத்திரனை அழைத்து உனது தந்தை வீண்பிள்ளையாகி மரணமடைந்துவிட்டபோதினும் தாங்கள் முடியைத் தரித்துக்கொண்டு சங்கத்தைச் சாரும் முப்பதாமாண்டு நெருங்கியவுடன் சமணமுநிவராகி சாத்துயர் நீக்கிக்கொள்ள வேண்டு மென்னும் ஆசி கூறி கழட்டியெறிந்த முடியை மைந்தன் சிரசில் மறுபடியும் சூட்டி விடுவது இயல்பாம். இத்தகைய செயல்கள் யாவும் மக்களுக்கு உச்சாகத்தை உண்டு செய்து ஞானயீடேற்றமடைவதற்கேயாம்.
இஃது பூர்வ பௌத்த தன்மச் செயல்களாயினும் தொன்றுதொட்டு வழங்கிவந்தவற்றை மறவாது நாளதுவரையில் இத்தேசக் குடிகள் ஆதிகன்மமென்றும், கன்ம ஆதியென்றும் வழங்கி வருகின்றார்கள். வழங்குஞ் செயல்கள் யாவும் ஞானவீரச் செயலாதலின் புத்தசங்கஞ்சாராதவர்கள் இவற்றைச் செய்வதால் யாதொரு பயனுமில்லை.
அரிச்சந்திரனென்னும் ஓர் கற்பனா கதையை உண்டு செய்து வீரவாகென்னுமோர் பறையன் சுடுகாடு கார்த்திருந்தானென்று பௌத்த சக்கிரவர்த்தியை இழிவுகூறிவைப்பதுடன் பறையனென்னும் பெயரை நிலைக்கச் செய்து காலமெல்லாம் அவனைத் தலையெடுக்கவிடாமல் உயிரோடுள்ள வரையிலுங் கெடுத்துவருவதன்றி செத்தப் பின்பும் அவ்விழிவு அவனை மாறவிடாதிருப்பதற்காக சத்துருக்களால் அவ்வரிச்சந்திரனென்னுங் கல்லை நட்டு பொய்க் கதையை மெய்க்கதையென நம்பி நாளெல்லாம் இழிவடைந்து போகத்தக்க வழியில் விடுத்திருக்கின்றார்கள்.
அவர்களது மித்திரபேதமும் வஞ்சகச் செயலுமறியா பேதை மக்கள் அவற்றை மெய்யென நம்பி மோசம் போய்விட்டார்கள். பூர்வ பௌத்ததன்ம காலத்தில் அரிச்சந்திரனென்னுங் கதையுங் கிடையாது அக்கல்லுங் கிடையாது.
வேஷப்பிராமணர்களும் பொய்மதஸ்தர்களும் தோன்றிய பின்னரே பெளத்தர்களைக் கெடுத்து தங்கள் மதக்கடைகளைப்பரப்பி சோம்பேறி சீவனஞ் செய்வதற்காக வனந்தம் பொய்க்கதைகளை உண்டு செய்து பௌத்தர்களை தாழ்ச்சியடைய வைத்திருக்கின்றார்கள். பூர்வபௌத்த கால பேதங்களையும், தற்கால பேதங்களையும் இந்திரதேச சரித்திரத்தில் தெளிவாகத் தெரிந்துக்கொள்ளலாம்.

- 5:4 சூலை 5, 1911 –
 

76. கீழ்ச்சாதி மேற்சாதி என்போர் வியாஜியம்

நமது பத்திரிகையில் இவ்வியாஜியத்தைப் பற்றி எழுதியிருந்தோம். அதன் சுருக்கமாவது, சித்தூர் ஜில்லா வாலாஜாப் பேட்டை காவேரி பாக்கத்தை அடுத்த வேகாமங்கலமென்னுங் கிராமத்தில் அம்மன் கோவிலில் பொங்கலிடும் விஷயமாக மேற்சாதி என்போர்கள் கீழ்ச்சாதி என்போர்களை பலவகைத் துன்பங்களைச்செய்து அவர்களுடைய பொங்கற்பானைகளையும் உடைத்து வீடுகளையும் நாசஞ்செய்துவிட்டதின் பேரில் ஏழைக்குடிகள் யாவருங்கூடி,