பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70/ அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

தெனில், அவர்களுக்குள்ள முயற்சியும், வல்லபமும், தன்னரவரன்னிய ரென்னும் பட்சபாதமும், குடிகளுக்கு நேரிட்டுள்ள துக்கங்களைத் தங்களுக்கு நேரிட்டத் துக்கம் போற் கருதி ஆதரிக்குஞ் செயலும், வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் நிறைந்த குணமுமுடையவர்களாதலின் தாங்கள் ஏற்றுக் கொண்ட உத்தியோகங் களை சரிவர நடத்தவும் மேலுமேலும் சீர்திருத்தவும் உள்ளவர்களாதலின் அவர்களே இம்முநிசபில் கமிஷனர்களாக ஏற்பார் களாயின் கண்ணோக்க முடையவராகி வீதி முதலியவற்றை சீர்திருத்தச் செய்வதுடன் குடிகளுக்கு நேரிடும் சுகாசுகங்களையும் அப்போதைக்கப் போதே சீர்திருத்தி சுகச்சீரளித்து வருவார்கள்.

- 5:20 ; அக்டோபர் 25, 1911 -
 

91. மாடதிபதிகளுக்கு குண்டு வேண்டுமாம் குண்டு

இத்தேசத்தின் பண்ணைபூமிகளைப் பண்படுத்தி தானியங்களை விதைத்து பயிறுகளை ஓங்கச்செய்து குடிகளுக்கு உபகாரிகளாக விளங்கும் ஏழைக்குடிகள் எக்கேடுகெடினுங் குண்டு கொடுத்தால் போதுமென சிலர் வெளிதோன்றியிருக்கின்றார்கள்.
பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்னும் மூன்றினையும் வெறுத்து மடஞ் சேர்ந்தோருக்கு இராஜாங்கத்துக்குரிய குண்டு வேண்டுமென்பது மடாதிபரது கருத்தோ அன்றேல் பத்திரிகைகளுக்கெழுதும் கடிதக்காரர்கள் கருத்தோ விளங்கவில்லை.
மடாதிபர் கருத்தாயின் அவர் பசுந்தோலைப் போர்த்துள்ள புலியேயாவர். கடிதக்காரர் கருத்தாயின் உள்ள மடாதிபர் ஒவ்வொருவருக்கும் இருபத்தியோர் குண்டு தீர்க்கவேண்டுமென்னும் உத்திரவைப்பெற்றுக் கொண்டு அவர்கள் தான் இத்தேசத்திய அரசர்கள் அவரைச் சூழ்ந்திருக்கும் யாங்களே படைகளெனத் தோன்றி சுதேசிய சுகந் தேடுவார் போலும்,
அந்தோ பல்லாயிரங் குடிகளைக் கார்த்து அவர்களுக்கு யாதோரிடுக்கம் வாராமற் பார்த்து ரட்சித்துவரும் அரயர்களுக்கு இருபத்தி யோர்குண்டும், அரயாது ஆலோசினை சங்கத்தவர்களாயிருந்து இராஜகீய காரியாதிகளுக்கு மந்திரவாதிகளாக விளங்குவோருக்கு பதினேழுகுண்டும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரால் தீர்த்துவருவது அனுபவமாகும்.
இத்தகைய கௌரதாவெடிகுண்டின் செயலை மடாதிபதிகளுக்கும் அளிக்கவேண்டுமென்பது யாது மதியோவிளங்கவில்லை. கத்தோலிக்கு மார்க்கப் போப்புகளை இராஜர்களுமவர்களே குருக்களுமவர்களே எனக் கொண்டாடுவதுபோல் தங்கள் மடாதிபதிகளையும் இராஜரிஷிகளாக்கிக் கொள்ளலா மென்னும் அவாப்போலும். இராஜனாவதற்கும் வல்லபங் கிடையாது. ரிஷியாவதற்கும் ஞானங்கிடையாது. இத்தகைய புருடர் இராஜ கனவு காணுவதினும் ரிஷிகள் கனவு காணுவதினும் யாதுபயன். மடாதிபர் களேனும், கடிதக்காரர்களேனும் தேசத்தையும் தேசமக்களையும் நோக்கி அவர்களுக்குள்ள குறைகளை நீக்கி சீர்திருத்திச் செவ்வைச் செய்வார்களாயின் மடாதிபர்களையும், கடிதக்காரர்களையுங் குடிகள் கொண்டாடுவதுடன் அரசர்களும் நன்கு மதிப்பார்கள். அங்ஙனமின்றி தேச சீர்திருத்தக்காரர் களுக்கும் மதியூகிகளுக்கும் கௌரதா பட்டமளிப்பதுபோல் மடாதிபர்களுக்கு குண்டு கேழ்ப்பது தங்கள் வேதத்திற்கடுக்குமா, புராணங்களுக்கடுக்குமாவெனத் தெரிந்துக் கொள்ள வேண்டியதுதான்.
மடங்களிலுள்ள மடாதிபர்களால் தேசக்குடிகளுக்குக் கல்வி விருத்தி யேனுமுண்டா, வித்யா விருத்தியேனுமுண்டா, செல்வவிருத்தியேனுமுண்டா, சுகவிருத்தியேனுமுண்டா யாதுங் கிடையாவே. மற்றும் அரசர்களுக்கேனும் மதியூகமளிப்பதுண்டோ அதுவுங் கிடையாவே. வெறுமனே வோர் கூடத்திற் சேர்ந்து ஊரார் சொத்தைக் கஷ்டமின்றிப் புசித்து உழ்க்கார்ந்திருப்பவர்களுக்கு இராஜ கௌரவமாம் வெடிகுண்டு வேண்டுமென்பது விந்தையிலும் விந்தையேயாம்.

- 5:25 ; நவம்பர் 29, 1911 -