பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


ஒழுக்கத்தால் அறத்தை ஓம்பினார் -
ஏழ்மைக்கே அழுதார்! அடிமைக்கே கூற்றமானார்!
ஏற்றத்திற்காகவே இறைவனைத் தொழுதார்.
அவர் ஒரு பேருரு!
உருவத்திற்கு நிழல் வேண்டாமா?
நிழலிலே உருவம் வேண்டாமா?

ஒரு செடியினுடைய வேர், பூமியிலே எங்கெங்கு ஓடுகின்றது என்று யாருக்குத் தெரியும்?

பிறகு அந்த வேரே, மற்றொரு செடிக்கும்
விதையாக மாறுகிறது அல்லவா?

காந்தியடிகளுடைய அன்பு, பண்பு, அடக்கம், அகிம்சை, எளிமை, தெளிவு, மனிதத் தன்மை, மாண்பு, சிந்தனை, சீரிய செயற்றிறம் அத்தனையும் உலகத்தில் விதைகளாகச் சிதறியிருக்கின்றன.

பண்பட்ட மண்ணில் விழுந்தவை முளைக்க ஆரம்பித்தன. அதுதானே இயற்கையின் இயல்பு காலத்தின் சுரப்பு!

அவரை நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே - மற்றொருவர் அவரைப் போலவே பிறக்க ஆரம்பிக்கின்றார்! இனமான விருத்தியுள்ள விதைகள் இவர்கள்.

தன்னைப் போலவே, ஓர் இனத்தையே படைக்க - விதைகளாகவே விளங்குபவர்கள்.

அவரைப் போல பிறந்தவர்கள் - அவரைப் போலவே இருக்கிறார்கள்.

அவரைப் போலவே மனித நேயத்தில் நடப்பவர்கள் - மண்ணாக மறைந்தபின் - எல்லாருடைய கால்களிலும் அடிபடுகிறார்கள்.

ஏற்கனவே, 1948-ல் மறைந்து ஒளிவிடும் விண்மீனோடு, அதோ, புதிதாக ஒரு விண்மீன் 1969-ல்வானத்தில் கைகோர்த்து உலா வருகின்றது.

62