பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28


ரிஷ்லு அப்போதுதான் ராணுவக் கல்லூரியில் திறம் படப் பயிற்சி பெற்றுவந்தான். அவன் நிலையிலிருந்த எந்த வாலிபனும், ராணுவ உடை தரித்துக்கொண்டு, குதிரைமீது சவாரி செய்துகொண்டு, உல்லாசமாக வாழலாம்; போர் மூண்டால், களத்திலே திறம் காட்டி, வீரத்தை விளக்கி, விருது பெறலாம், தளபதியாகலாம் என்றுதானே எண்ணுவான். காவி அணிந்து கமண்டலம் ஏந்தி, பாவிகளை ரட்சிக்கும்படி பரமனிடம் 'பூஜை' செய்யும் பண்டார வேலைக்குப்போக மனம் ஒப்புவானா? ரிஷ்லு சம்மதித்தான்! வாள் ஏந்திய கரத்தை, ஜெபமாலை ஏந்தும் கரமாக்கிக்கொள்ள இசைந்தான். வலப்புறம், இடப்புறம், எதிர்ப்புறம் என்று குதிரையைச் செலுத்தி, போர்முறை பயின்று வந்தவன், அந்தி வேளைப் பூஜை, அதிகாலைப் பூஜை, அருள் கூறல், பிரசாதம் வழங்கல்; ஆறுதலளித்தல், குற்றம் கடிதல் என்பன போன்ற காரியங்களில் ஈடுபட இசைந்தான். காரணம் என்ன? எந்தக் காரியம் செய்தாலும், திறமையை விளக்கச் சந்தர்ப்பம் கிடைக்குமல்லவா, அதுதான் தேவை, ரிஷ்லுவுக்கு. அவ்வளவு தன்னம்பிக்கை! தளபதியாவதற்கான துறையை விட்டுவிட்டு, 'சாமியார்' வேலையை மேற்கொண்ட ரிஷ்லு, லூகான் தேவாலய நிர்வாகக் காரியத்தை ஒழுங்குபடுத்துவதிலே மும்முரமாக ஈடுபட்டான். அருள் பெரும் திருமுறையை மக்களுக்கு அறிந்துரைக்கும் பணியான 'பூஜாரி வேலையை மேற்கொண்டபோது, ரிஷ்லுவுக்கு வயது, பதினேழு!

லூகான் நகருக்கு வந்து வேலையை ஒப்புக்கொள்வதற்கு முன்பு, ரிஷ்லு, தன் புதிய தொழிலுக்குத் தேவையான திறமையைப் பெற, பாரிஸ் சென்று மார்க்க சம்பந்தமான படிப்புக்காக இரண்டாண்டுகள் செலவிட்டான். எவ்வளவோ பேர், பூஜாரிகளாக உள்ளனர், கிடைக்கும் வருமானத்தோடு திருப்தி அடைந்து, கிராமத்துக் கொல்லனும் உழவனும், ஜெபமாலை உருட்டும் கிழவியும், பாவ மன்னிப்புக் கோரும் முதியவனும் தரும் பாராட்டுதலைக் கேட்டுக் களித்து இது போதும் நமக்கு என்று. ரிஷ்லு, அப்படியல்ல!' லூகான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/28&oldid=1549084" இலிருந்து மீள்விக்கப்பட்டது