29
தேவாலய அதிபர் யாராலும் பாராட்டப்பட வேண்டியவராக வேண்டும். மற்றத் தேவாலய அதிபர்களெல்லாம், இரண்டோர் ஏடுகளை மனப்பாடம் செய்துகொண்டவர்கள், ஆழ்ந்த ஆராய்ச்சி, அறிவுத் தெளிவுள்ள விளக்கவுரை தரும் ஆற்றல் இல்லாதவர்கள். லூகான் நகர தேவாலய அதிபராக, அரும்பு மீசை வாலிபன் ஒருவன் அமர்ந்திருக்கிறான். அவனுடைய அறிவே அறிவு, அவன் அளிக்கும் உபதேசமே உபதேசம் என்று அனைவரும் புகழ்ந்து பேசவேண்டும்; மக்களின் கவனத்தைக் கவரவேண்டும்: அந்தப் புகழொளி, பாரிஸ் நகரில் தெரியவேண்டும்; அழைப்பு அங்கிருந்து கிடைக்கவேண்டும்--இது ரிஷ்லுவின், எண்ணம், கிடைக்கும் வாய்ப்பை, பெரியதோர் நிலைபெற உபயோகிக்கவேண்டும் என்ற நோக்கம். எனவேதான், பரம்பரை பாத்யதையாகக் கிடைத்த பூஜாரி வேலை என்றாலும், மதவாத உலகு மதிக்கும் விதமான அறிவாற்றல் பெற்று, அந்த வேலையில் ஈடுபடவேண்டும் என்று ரிஷ்லு திட்டமிட்டான். இரண்டாண்டுகள் கடுமையாக உழைத்து, மத ஏடுகளில் பெரும் புலமை பெற்றான்.
உண்மையிலேயே மார்க்கத் துறையிலே நம்பிக்கையும் அக்கரையும் பிறந்தால், எந்தச் சந்தேகத்தையும் பஞ்சு பஞ்சாக்கவல்ல ஆதாரங்களை ஆய்ந்தறிந்துகொள்ள வேண்டும், மெஞ்ஞானத்தின் தன்மையை உணரவேண்டும், சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வத்தை தேஜோமயாநந்தத்தை அறிந்து மகிழ வேண்டும் பவப்பிணி அகலும், பற்றும் பாசமும் மாய்ந்தொழியும், அருள் கிட்டும், பரலோகத்தில் சீரியதோர் நிலை கிடைக்கும் என்பதற்காக, இரவு பகலாக, ஆண்டுக்கணக்கில், மத ஏடுகளைக் கற்றும், விதவிதமான 'ஞானாசிரியர்களை' அடுத்தும், பக்குவம் பெற முயல்வர். ரிஷ்லுவின் நோக்கம் அவ்விதமானதல்ல. உலகத்தின் மாய்ஞையை, வாழ்க்கையின் நிலையாமையை உணர அல்ல, ஏடுகளைப் படித்தது; அவைபற்றி, கேட்போர் மெச்சும் விதமாக எடுத்துரைக்க! அதன்மூலம் தன் புகழ் பரப்ப!