பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


புகழொளியைத் துணைகொண்டு, உரியதோர் பதவி பெற, பாரிஸில் அரசோச்சும் குழுவிலே அமர, அரசாள!

லூகான் நகர தேவாலய அதிபராகி, அதிலேயே மூழ்கிவிட விரும்பவில்லை. இது ஒரு கட்டம்--முக்கியமானது--கூர்த்த மதியுடன் இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், வேறு பல கட்டங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பது ரிஷ்லுவின் திட்டம். யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள், அனேகருக்குத் தோன்றவே செய்யாது. ஆனால் ரிஷ்லு எல்லோரையும்போல அல்ல. அவன் மனதிலே உறங்கிக்கொண்டல்ல, உலவியபடி இருந்த ஆசைகள் அநேகம். எல்லா ஆசைகளும் அதிகம் பெறவேண்டும், ஈடில்லை எதிர்ப்பில்லை என்ற நிலை பெறவேண்டும் என்பதுதான். வாளின் கூர்மையைப் பாராட்டும் வீரன், களத்திலே வெற்றியும் கீர்த்தியும் பெறுவதற்கு வாளைத் துணையாகக்கொள்வான்; மற்றவர்களுடைய கூர்மையைவிட என் வாளின் கூர்மை நேர்த்தியானது என்று பேசிக்கொண்டா காலங் கடத்துவான்!

பாரிசில், மத ஏடுகளைக் கற்று, ரிஷ்லு, பல பரிட்சைகளில் தேறினான், திருப்தியில்லை- ரோமாபுரி சென்று, போப்பாண்டவரைக் கண்டுவர ஆவல்கொண்டான்.

கத்தோலிக்க உலகுக்கு போப்பாண்டவர் கண்கண்ட கடவுள்! அரசுகள், போப்பாண்டவரின் ஆசிபெறத் தவங்கிடந்தன. பிராடெஸ்டென்ட் புயல்வீசி, ஆதிக்கம் ஒரு அளவுக்கு அழிந்துபட்டது என்றபோதிலும், ரிஷ்லுவின் நாட்களிலே போப்பாண்டவருக்கு, பிரான்சிலேயும், கத்தோலிக்க மார்க்கத்தைக் கொண்டிருந்த வேறுபல ஐரோப்பிய நாடுகளிலேயும், அளவற்ற செல்வாக்கு. பக்திமிக்க கத்தோலிக்கர் போப்பின் தரிசனம், பாப விமோசனம் என்று எண்ணுவர் பரமண்டலத்திலே பிதா முன்னிலையிலே செல்வதுபோன்று புனிதத்தன்மை நிரம்பியதாகவே போப்பாண்டவரைத் தரிசிப்பதைக் கருதுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/30&oldid=1549012" இலிருந்து மீள்விக்கப்பட்டது