பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


ரிஷ்லு, போப்பாண்டவரைக் காண விரும்பியது, இந்த நோக்குடன் அல்ல! இதோ ஒரு புதிய நட்சத்திரம், இதன் ஒளியின் அழகுதனைக் காணீர்! என்று போப்புக்கு எடுத்துக் காட்டவே, ரிஷ்லு ரோம் சென்றான். அங்கு புகழ்பெற வேண்டும் என்பது நோக்கம். அதற்கோர் வாய்ப்பும் கிடைத்தது. தேவாலய அதிபர் பதவிக்கு ஏற்ற வயது இல்லை, ரிஷ்லுவுக்கு. எனவே போப்பாண்டவரிடம் மனுச் செய்துகொண்டு, அவர் ஆசியும் அனுமதியும் பெற்று, வயதிற் சிறியவனாயினும் வல்லமை மிக்கோன், எனவே இவன் ஆலய அதிபனாகலாம் என்று அவர் கூறவேண்டும்--இதனைச் சாதிக்க சிபாரிசு தேவை இல்லை: நானே செல்வேன், மார்க்க சம்பந்தமான துறையிலே எனக்குள்ள புலமையையும் திறமையையும் அவரே காணட்டும், அனுமதி எளிதில் அளிப்பார், என்று கூறிவிட்டு ரிஷ்லு ரோம் சென்றான்--அனுமதியும் பெற்றான்.

ஜந்தாம்பால் என்பவர் அப்போது போப்பாண்டவர். அவர் அவையிலே, மார்க்கத்துறைத் தலைவர்களும் அரசியல் துறைத் தலைவர்களும் நிரம்பி இருந்தனர். ரிஷ்லு, அந்த அவையினர் மகிழத்தக்க மதி நுட்பத்தைக் காட்டி வெற்றிபெற்றார். ஒரேமுறை, ஒரு உபதேசியார் அருளிய உபதேசத்தைக் கேட்ட ரிஷ்லு, உடனே அப்படியே அதைத் தவறு துளியுமின்றி ஒப்புவித்தாராம் - அதிசயமடைந்த போப்பாண்டவர் ரிஷ்லுவை அழைத்து, ஒப்புவிக்கச் சொல்லிக் கேட்டு இன்புற்றாராம். அதேபோது ரிஷ்லு, உபதேசம் எப்பொருள் பற்றியதோ அதே பொருள் குறித்துத் தானே புதியதோர் உபதேசம் தயாரித்து, சொற்பொழிவாற்றினாராம்; போப், மிகவும் பாராட்டினாராம்.

"ஆசாமி பெரிய எத்தனாவான்"--என்ற பொருள்பட போப் ரிஷ்லுவைப் பற்றிக் கூறினாராம்.

போப்பாண்டவரிடம், ரிஷ்லு, தன் உண்மை வயதை மறைத்துத் தவறான சீட்டுக் காட்டி ஏய்த்தார் என்றும் வதந்தி உண்டு. ரிஷ்லுவுக்கு இது தெரியாத வித்தையல்ல!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/31&oldid=1549013" இலிருந்து மீள்விக்கப்பட்டது