பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32


ரோம் நகரிலே புகழ் ஈட்டிக்கொண்டு, பதவிக்கான அனுமதியும் பெற்றுக்கொண்டு, ரிஷ்லு, பாரிஸ் திரும்பினார்.

ரோம், மார்க்கத்துறைக்குத் தலைநகரம்! பாரிஸ், அரசியல் உலகுக்குத் தலைநகரம்!

முன்னதில் ஜெபமாலை ஏந்திய கரத்தினர், வாளேந்திய மன்னரைச் சீடராகக்கொள்ளும் முறைபற்றிய விளக்கம் கிடைத்தது, ரிஷ்லுவுக்கு.

பாரிசில், அரசோச்சும் அதிபர்கள், ஜெபமாலையையும் தமது சுயநலத்துக்காக எப்படிப் பயன்படுத்துகின்றனர், என்ற தெளிவு கிடைத்தது.

பாரிசில், அரசியல் சம்பவங்கள் மின்னல் வேகத்தில்! ரிஷ்லு, அவைகளை எல்லாம் கூர்ந்து கவனித்தார்.

லூகான் நகர தேவாலய அதிபர் - போப்பாண்டவரின் ஆசியும் பெற்றவர்--இவருக்கு எதற்காகப் பாரிஸ் பட்டணத்துப் பகட்டுடைக்காரர்களின் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றிய அக்கரை என்று எண்ணுவீர்கள்--உடை மட்டும் தானே காவி! உள்ளமோ அரசியலில் ஆதிக்கம் பெற வேண்டும் என்பதல்லவா!

"ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு" இது ஏமாளிக் கொக்கு அல்ல, உறுமீன் வருமளவும் ஓடுமீன் உண்டு, காத்துக்கொண்டிருந்தது!

லூகான் நகர தேவாலயம் ஆண்டுக்கு 13000 விவர்ஸ் (பிரன்ச்சு பவுண்டு) வருமானமே உடையது. இந்த அற்பத் தொகைக்காக அல்ல, ரிஷ்லு ஆசைப்பட்டது? அவன் மனதிலே உலவிய எண்ணத்தின் முன்பு, இந்தத் தொகை வெறும் தூசு. பலருடைய கவனத்தைக் கவருவதற்கு இந்த இடம் ஒரு வாய்ப்பாக இருக்கட்டுமே என்பதற்காகவே, லூகான் தேவாலய வேலையை ஏற்றுக்கொண்டான்.

பழைய கட்டடம்--படாடோபம் கிடையாது--அதிகமான பணப் புழக்கம் இல்லை--தங்க வெள்ளி தட்டுகள் இல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/32&oldid=1549014" இலிருந்து மீள்விக்கப்பட்டது