பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40


முழவு! ரிஷ்லுவுக்கு நம்பிக்கை பலப்பட்டது. இதுதானே பிரான்ஸ், இவர்கள்தானே இதன் நடுநாயகங்கள். ஒரு கை பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை.

மன்னனைக் கூர்ந்து நோக்கினான்--கண்களிலே அறிவு ஒளியின் குறியே காணோம். எங்கேயோ நினைப்பு! மன்னனுக்கு எந்தத்துறையிலே விருப்பம் அதிகம் என்று உசாவினான். வேட்டை ஆடுவதில் என்றனர்.

காண்டி பிரபுவுக்குச் சப்பிட்டுவிட்டது. பேரவை கூடியதும், பலரும் கான்சினியைக் கண்டித்து விட்டு, அதிகாரப் பொறுப்பைக் காண்டிபிரபுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுவர், என்று எதிர்பார்த்தான்--யாரும் அது குறித்துப் பேசவில்லை. அவரவர்களுக்கு அவரவர்களின் பிரச்னைதான் பெரிதாகத் தென்பட்டது, பொதுப் பிரச்னை எது என்பதும் புரியவில்லை. நிலைமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் ஆற்றலும் காண்டி பிரபுவுக்கு இல்லை. ஒருவரிருவர் மேரி அம்மையின் ஆட்சிப் போக்கைக் கண்டித்தனர் பரிகாரம் கூறவில்லை. ரிஷ்லு, மேரி அம்மையைக் கண்டித்த வருக்குச் சுடச்சுடப்பதில் கொடுத்து, மேரி அம்மையின் பார்வையைப் பரிசாகப் பெற்றான்.

பொருளற்ற பேச்சுகள் ஒன்றை ஒன்று துரத்தின--பேரவை வீண் ஆரவாரமே என்பது புரியத் தொடங்கி விட்டது நாட்கள் உருண்டோடின. திங்கள் சிலவும் சென்றன். ரிஷ்லு மத அலுவலர்களின் சார்பிலே பேச அழைக்கப்பட்டார். மேரி அம்மையின் தயவே அதற்குக் காரணம், ஜனவரி 24-ம் நாள், ரிஷ்லு பேரவையில் ஆழ்ந்த பொருள் நிரம்பிய சொற்பொழிவு நிகழ்த்தி அனைவருடைய கவனத்தையும் தன்பால் திருப்பிக் கொண்டார். ஒரு மணி நேரச் சொற்பொழிவு--ஒரு துளியும் மார்க்க சம்பந்த மானதல்ல--முழுவதும் அரசாளும் முறைபற்றியது. ரிஷ்லு அந்தப் பேச்சின் மூலம், மேரி அம்மைக்குத் தன்னையும் தன் ஆற்றலையும், நோக்கத்தையும், திட்டத்தையும் விளக்கிக் காட்டினார்.

ஆண்டவன் அளித்த பிரசாதம், அரசாளும் உரிமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/40&oldid=1549022" இலிருந்து மீள்விக்கப்பட்டது