பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

எனவே அரசாள்வோருக்கு அன்பும் மரியாதையும் அப் பழுக்கின்றித் தரப்பட வேண்டும்.

ஆண்டவன் சார்பிலேயே அரசாள்வோர், பணிபுரிகின்றனர். எனவே, அரசாள்வோரின் அதிகாரம், பலம் தலைசிறந்து விளங்கவேண்டும்--அதைக் குலைப்பதோ, எதிர்ப்பதோ பாபம், கேடு, நாட்டுக்கு நாசம்.

ஆண்டவன் அளித்த உரிமையைக் கொண்டு அரசாள்கின்றனர். எனவே அரசாள்வோர், ஆண்டவனுடைய அருளைப் பெற்று, ஆட்சி முறையைச் சிறப்படையச் செய்தல் வேண்டும்.

ரிஷ்லுவின் பேச்சிலே காணக்கிடக்கும் முக்கியமான கருத்து இது! ஆள்வோரின் உரிமை, அதிகாரம்--அதை அருளாளர்களின் துணை கொண்டு அரண் செயல் வேண்டும்--என்பதுதான் தத்துவம். நான் இருக்கப் பயமேன்! என்று கேட்பதாக அமைந்தது, அந்தப் பேச்சு. பேரவையினர், முதலில் மகிழ்ந்தனர், பேச்சின் தெளிவும் திறமும் கண்டு; பிறகோ மருண்டனர், உட்பொருள் புரிந்தவர்கள். மேரி அம்மையின் மனதிலே, ரிஷ்லு நமக்குற்ற நண்பன் என்பது பதிந்து விட்டது--ரிஷ்லுவுக்கு அது புரிந்து விட்டது. பேரவை பயனற்றுப் போயிற்று என்று பலர் மனம் வாடினர். குறிப்பாகப் பேரவையைக் கூட்ட பெருமுயற்சி எடுத்துக் கொண்ட காண்டி பிரபுவுக்கு, சகிக்க முடியாத சலிப்பு. பேரவை, பெரியதோர் வெற்றி--ஆண்டு பலவாக நான் உழைத்தது வெற்றி தருகிறது, என் குரல் கேட்டு விட்டது--மேரி அம்மையாரின் மனதிலே என்பேச்சுப்பதிந்துவிட்டது--இனி அம்மைக்கு அரசியல் ஆபத்து நேரிட்டது என்ற உடன் எனக்குத்தான் அழைப்பு வரும். இனி, என் அரசியல் நுழைவு உறுதிப் படுத்தப்பட்டு விட்டது--என்று ரிஷ்லுவுக்குக்கூறிக் கொள்ள முடிந்தது. யாராலோ எதற்கோ கூட்டப்பட்ட பேரவை, ரிஷ்லுவுக்குத்தான் பெரிதும் பயன்பட்டது. பிரான்சும் புரிந்து விட்டது, அதை ஆளும் முறையும் ரிஷ்லுவுக்குப் புரிந்து விட்டது.

அ-18
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/41&oldid=1549023" இலிருந்து மீள்விக்கப்பட்டது