பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

இரண்டும் போதாதோவென்று, புதிதாகச் செல்வாக்குப் பெற்றுவரும் காண்டி பிரபுவிடம் ஆதரவு நாடி, ரிஷ்லு கடிதம் தீட்டினான். எவரிடமும் உள்ளன்போ, மதிப்போ, எவர் கொள்கையிலும் திட்டத்திலும் பற்றே நம்பிக்கையோ அல்ல; யாரைப் பிடித்தால் தனக்குச் சரியான இடம் கிடைக்கும், யாரிடம் திறவுகோல் இருக்கிறது, யாருடைய புன்சிரிப்பு, அரசியல் வாய்ப்பளிக்கக் கூடியதாக இருக்கிறது என்ற இதுவே, ரிஷ்லுவின் உள்நோக்கம். எனவேதான், மேரி, கான்சினி, காண்டி எனும் எவர் நிலை எப்போது உயர்ந்து காணப்பட்டாலும், அவர்களிடம் குழைந்து கும்பிட்டுக் குறுநகை கோரி நிற்க ரிஷ்லு முனைந்தான். சொந்தக் கௌரவம், முன்பின் நடவடிக்கைகளைக் கணக்கிடும் பண்பு என்பதுபற்றி ரிஷ்லுவுக்குக் கவலை கிடையாது. எதைச் செய்தாலும், கோரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் - கணைவீசிப் பிடிக்கலாம்; வலை வீசியும் பிடிக்கலாம்; முறை எதுவாகவேனும் இருக்கலாம்; பலன் கிட்டவேண்டும் என்பதுதான் ரிஷ்லுவின் எண்ணம்.

இந்தச் சந்தர்ப்பத்தில், மேரி, ரிஷ்லுவை, ராணி ஆனுடைய தர்மாதிகாரியாக நியமித்தார்.

பிரான்சு அரச குடும்பத்திலும், பிரபு குடும்பங்களிலும், தர்மகாரியத்துக்கென்று அவரவர்களின் நிலைமைக்கு ஏற்ற அளவு தொகை ஒதுக்கித்தரப்படும்--இந்தத் தொகையைத் தக்க முறையில் பகிர்ந்தளிப்பதற்குத் 'தர்மாதிகாரி' நியமிக்கப்படுவதுண்டு.

ரிஷ்லுவுக்கு அந்தவேலை கிடைத்தது. சாதாரணமான வேலைதான்--அரசியல் அதிகாரம் கொண்டதல்ல--ஏழை எவர், எளியவர் யார், விதவையின் அழுகுரல் எங்கு கேட்கிறது, எந்தத் தேவாலயத்தில் அலங்கார விளக்கு இல்லை என்பன போன்றவைகளை அறிந்து, ராணி ஆன் வசம் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/45&oldid=1549027" இலிருந்து மீள்விக்கப்பட்டது