பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61


மையின் மனதை மாற்றி, மன்னனிடம் சமரசமாகி விடும்படி செய்து விட்டான். இந்தச் சம்பவம், அரண்மனையில் ரிஷ்லுவின் செல்வாக்கை வளமாக்கி விட்டது. ஒரு நாள் எபர்னான் பிரபு, மாளிகை மாடியிலிருந்து கீழே வந்து கொண்டிருக்கும் போது ரிஷ்லுவின் ஆதரவாளர் ஒருவர், படிக்கட்டில் அவரைக்கண்டு, "பிரபுவே! என்ன ஏதேனும் விசேஷம் உண்டா?” என்று கேட்க, எபர்னான், "ஏன் இல்லை!! நீங்கள் உயரப்போகிறீர்கள், நான் கீழே இறங்குகிறேன்!" என்று பதிலளித்தாராம்!! யூகம் நிரம்பி பதில்.எபர்னானுக்கு மேரி அரசி ஏதும் உதவி செய்யவில்லை; ரிஷ்லுவுக்கோ, அன்னையும் ஆதரவு தந்தார், அரியாசனத்திலிருந்த மகனும் தந்தான்!!

இது எனக்கு எம்மாத்திரம், என்றுதான் ரிஷ்லு எண்ணினார், ஆனால் பயனற்றது என்று கூறவில்லை. பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சமரசம் முறிந்ததும், மீண்டும் சமர் கிளம்பிற்று--மீண்டும் சமரசம். இப்படி நிகழ்ச்சிகள் ஊஞ்சலாடின--இந்நிலையில் லைனிஸ் இறந்துபட்டான்--மன்னன், யாருடைய துணை கொண்டோ துரைத்தனம் நடத்திப் பார்த்துச் சலிப்புற்று, ரிஷ்லுவுக்கு அழைப்பு அனுப்பினான், 1624-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29-ம் நாள், ரிஷ்லு மீண்டும் ஆட்சிக் குழுவில் இடம்பெற்றான்--நாலு திங்களில், உடனிருந்த அமைச்சர்களை மூலையில் அமரச்செய்து விட்டு, முதலமைச்சரானான்--முடி தரித்தவன் லூயி--ஆட்சி கார்டினல் ரிஷ்லுவிடம்! நீண்டகாலத் திட்டம் பலித்துவிட்டது! பிரான்சு, ரிஷ்லு கரத்தில் சிக்கிவிட்டது. லூகான் தேவாலயத்திலே பூஜாரி வேலையா பார்க்கக் சொன்னார்கள், பிரான்சை ஆளும் பெரும் பதவிக்கு ஏற்ற என்னை! என்று எண்ணினான். பெற்றதைப் பலப்படுத்தும் பெரும் பணியைத் துவக்கினான். மன்னனை மெள்ள மெள்ள வசப்படுத்திக் கொண்ட, ரிஷ்லு, பிரபுக்களின் கொட்டத்தை அடக்குவது, ஹ்யூஜீ நாட்ஸ் எனும் பெயர் படைத்த பிராடெஸ்ட்டென்ட் மக்களை ஒடுக்குவது, வெளி நாடுகளில் பிரான்சின் கீர்த்தியை நிலைநாட்டுவது எனும் மூன்று திட்டங்களை மேற்கொண்டு ஒவ்வொன்றிலும் வெற்றி கண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/61&oldid=1549043" இலிருந்து மீள்விக்கப்பட்டது