63
மக்களுக்காக என்று ஒரு சிறு செயலையும் மேற்கொள்ளவில்லை.
மக்கள், எப்போதும் போல ஏக்கமிகுந்து. இருந்தனர்--பசி தீரவில்லை, வாழ்க்கை சிறக்கவில்லை--தொழில் வளம் பெருக வில்லை, உரிமைக் குரலுக்கு இடமே இல்லை. பிரபுக்கள் ஒரு புறத்தில் அவர்களைச் சுரண்டினர், மத அதிபர்கள் மற்றோர் புறம் அரித்தனர். இந்தக் கொடுமைகளைக் களைய ரிஷ்லுவின் ஆற்றல் பயன்படவில்லை--அடிப்படையில் வெடிப்புக் கிடந்தது, ரிஷ்லுவோ, கலசத்துக்குப் பொன் முலாம் பூசிக்கொண்டிருந்தான்.
ரிஷ்லுவை எதிர்த்து மன்னனுடைய தம்பி, காஸ்ட்டன் பன்முறை கிளம்பினான்--ஒவ்வோர் முறையும் பரிதாபகரமான தோல்வியே கண்டான்.
மன்னன் தம்பி என்பதால் அவன் தலை தப்பிற்று--உடன் இருந்தோரின் தலைகள் உருண்டன.
வேண்டுகோள், அழுகுரல், கருணைமனு, எதனையும் பொருட்படுத்துவதில்லை, பாதையிலே குறுக்கிட்டால் தீர்ந்தது, பயங்கர மரணம்தான் பரிசு!
தன்னைச் சுற்றிலும் வேவுபார்ப்போர், தகவல் திரட்டுவோர், ஆகியவர்களை அமர்த்திக் கொண்டு, ரிஷ்லு நடத்திவந்த ஆட்சி முறையின் கடுமை கண்டு, பலரும் கலங்கினர்.
மன்னனின் தம்பி, காஸ்டன், காமக்களியாட்டத்திலே காலந்தள்ளி வந்த பதினெட்டாண்டு வாலிபன், அவனை ஆதரவாக நம்பி, இரு பிரபுக்கள் எதிர்ப்பு மூட்டினர். ரிஷ்லுவுக்கு, சதி, கருவிலிருக்கும்போதே தெரிந்து விட்டது--பிரபுக்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது--காஸ்டன், அண்ணனிடம் மன்றாடி உயிர் தப்பினான். ஒரு பிரபு சிறையில் தள்ளப்பட்டு மாண்டான்--காய்ச்சல் என்று கூறப்பட்டது. மற்றோர் பிரபுவுக்கு நேரிட்ட கதி, பிரான்சையே நடுங்க வைத்தது. காலே எனும் அந்தப் பிரபுவின் தலை சீவப்பட்டு, கோலில்செருகப்பட்டு, சதுக்கத்தில் காட்சியாக வைக்கப்பட்டது.