உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64


உடல் நாலு கூறாக்கப்பட்டு, ஊரின் நான்கு நுழைவு வாயல்களிலும் தொங்க விடப்பட்டன!

தேவாலய அதிபராக வாழ்க்கையைத் துவக்கியவரின், கருணை நிரம்பிய உள்ளம் இது! இப்படியா, என்று கேட்டால், அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற ஒரே பதில்!

காலே என்பவனுடைய தலை சீவப்பட்டது என்றால், எவ்வளவு காட்டுமிராண்டித் தனமான முறையில்--தலை வெட்டுவதற்கு தக்க ஆள் கிடைக்க வில்லையாம், எனவே இரு கைதிகள் இந்தக் காரியத்துக்கு அமர்த்தப்பட்டனர்--ஊதியம், விடுதலை! கோடரி கொண்டு இருபத்து ஒன்பது தடவை வெட்டிய பிறகே கழுத்துத் துண்டிக்கப்பட்டதாம். எல்லாம் அரசுக்காக! என்றான் ரிஷ்லு, 'ஆமென்!' என்றான் மன்னன்.

பயங்கரமும் கொடுமையும் நிரம்பி முறையிலே நடைபெற்ற நடவடிக்கைகள் பலப்பல. மக்களை வாட்டி வதைப்பவன், ஏழைகளை ஏய்த்தவன், சர்க்கார் பொருளைச் சூறையாடினவன், ஆலயச்சொத்தை அபகரித்தவன், போன்ற ஒரு 'குற்றவாளி' கூட ரிஷ்லுவின் கண்ணுக்குத் தெரியவில்லை! அப்படிப் பட்டவர்களை, குற்றவாளிகள் என்று கருதினால்தானே! ரிஷ்லுவின் கண்களுக்கு ஒரே ஒரு வகையான குற்றவாளி மட்டுமே தெரியும்--தன் ஆதிக்கத்துக்குக் குறுக்கே நிற்பவன்! அதுதான், பெருங் குற்றம்--மற்றவை, ரிஷ்லுவின் கவனத்துக்கு உரியன அல்ல!

லைனிஸ் இறந்துபட்ட பிறகு, மன்னன் பொழுது போக்குக்காகவேனும், தன் இல்லக்கிழத்தி ஆன் ராணியை நாடினானா! இல்லை! தன்னைச் சுற்றிலும், அழகு மங்கையரை உலவச் செய்து, ஒருவிதமான திருப்தி பெறுவான். களியாட்டம் மன்னனுக்குப் பிடிக்காது. அணங்குகள் அங்கும் இங்கும், ஆடியும் அசைந்தும், சிரித்தும் உபசரித்துக் கொண்டும் இருப்பர், இடையே மன்னன் இருப்பான்.

மன்னனுடைய பிரத்யேகமான ‘அன்பு' ஒரு அழகிக்குக் கிடைக்கும், பிறகு வேறோர் வனிதைக்கு மாறும், ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/64&oldid=1549046" இலிருந்து மீள்விக்கப்பட்டது