பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75


கண்டுகொள்ளவில்லை; கத்தோலிக்க மார்க்கரட்சகர், என்று அவர்கள் ரிஷ்லுவைக் கொண்டாடினர்; அவருடைய நோக்கம், கத்தோலிக்கரின் செல்வாக்கை வள த்திட பிராடெஸ்டென்டுகளை ஒழித்திட வேண்டும் என்பதல்ல, ஆட்சியைத் தான் முன்னின்று நடத்திச் செல்லும்போது, பிரான்சிலே ஒரு பகுதியினர், அடங்க மறுப்பதா! என்ன துணிவு! இவர்களை ஒழித்துக்கட்டா விட்டால், நம் மதிப்பு என்ன ஆவது!

இது ரிஷ்லுவின் எண்ணம். பதினைந்து திங்கள் முற்றுகை! உள்ளே ஒரு பொருளும் போகமுடியாது! பட்டினி போட்டுச் சாகடிக்கும் முறையிலே போர் இருந்தது! சித்திரவதைக்கு ஆளாக்கப் பட்டனர்! தன்மானம், நிமிர்ந்து நிற்கச் சொல்லுகிறது. பசியோ, பணிந்து விடு! என்று தூண்டுகிறது! உள்ளே இப்படி அடைபட்டுச் சாவதைவிட. போரிலே, தாக்கி, தாக்குண்டு இறந்துபடுவது எவ்வளவோ மேலாக இருக்குமே என்று எண்ணினர் அந்த மக்கள். பழைய செருப்புத் தோலைக்கூட வேகவைத்துத் தின்றனராம், எலும்புந் தோலுமாகிப்போன நிலையில்! இந்த அவதி பற்றி, லூகான் ஆலய அதிகாரியாக இருந்த ரிஷ்லுவுக்குத் துளியேனும் இரக்கம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை! உள்ளே அல்லல் அதிகமாகி விட்டது, அவதிப்படுகிறார்கள் என்று 'சேதி' கிடைத்ததும், அவருடைய உள்ளம், சரி! பயல்கள் இன்னும் சில நாட்களில் பணிந்து விடுவார்கள்! நாம் மேலும் ஓர் வெற்றி பெறுவோம், நமது புகழொளி பரவும் என்று எண்ணி மகிழ்ந்தது.

ஆஸ்திரிய அரச குடும்பத்தின் செல்வாக்கைக் குலைக்கும் திட்டம் ரிஷ்லுவுக்கு உண்டு. இதற்காகச் சமர் நடத்தினான், வெற்றி கிடைத்தது. சவாய் பரம்பரைக்கும், ரிஷ்லுவின் போக்கினால் கஷ்டம், நஷ்டம். இவைகளின் பயனாக பிரன்ச்சு மக்களுக்கு ஏதேனும் நலன் கிடைத்ததா என்றால், இல்லை; ரிஷ்லுவின் கண்களுக்கு மக்கள் தெரியவுமில்லை.

ரிஷ்லுவின் நிலை உயர உயர, பகையும் வளரத்தான் செய்தது--ஒவ்வொரு பகையையும் பயங்கரமான முறையிலே முறியடித்துவந்தான். ஒற்றர்கள் அவனுக்குக் கண்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/75&oldid=1549058" இலிருந்து மீள்விக்கப்பட்டது