பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

அவர்கள் அமைத்த நீதி மன்றத்தில் உழவன், கைகட்டி நிற்க வேண்டும், அவர் சொல்வதுதான் சட்டம்!

உழவன், விளைந்ததை விற்றுத் தேவையானதைப் பெற்று வரலாம் என்று கிராமத்தை விட்டுக் கிளம்பி சந்தை கூடும் இடம் போவான், வழியிலே, சீமான்களின், சுங்கச்சாவடி இருக்கும், வரிகட்டினால்தான், போக அனுமதி.

இவ்வளவும் இவைகளின் விளைவாகவும் கொடுமைகள் மலிந்து கிடந்தன. அறிவாற்றல் படைத்த, எடுத்த செயலை முடித்தே தீருவதிலே வல்லமை பெற்ற ரிஷ்லு, என்ன செய்தான்? சிறு விரலையும் அசைக்க வில்லை.

மத அலுவலர்களின் போக்கோ-பிரபுக்கள் பயிற்சி பெறவேண்டிய கல்லூரியாக இருந்தது.

பட்டிக்காட்டு உழவன் விளைவதில் பத்திலோர் பாகத்தை 'காணிக்கையாகத்' தந்துவிடவேண்டும்-இந்தக் காணிக்கை பல கிராமங்களிலே சேகரம் செய்யப்பட்டு, ஒரு தேவாலய அதிபருக்கு போய்ச் சேரும். மதச்சடங்குகளின் போதெல்லாம், 'வரி' கட்டவேண்டும். முணுமுணுக்கக் கூடாது, கணக்குப் பார்த்தலாகாது, புண்யம் கிட்டாது. தேவாலயம் அருளாலயம், என்பன போன்ற திருப் பெயர்களைத் தாங்கிக் கொண்டிருந்த மத அமைப்புக்கு, தானமாகக் கிடைத்த நிலங்களிலிருந்து மட்டும் 100,000,000 பிரன்ச்சு பவுன் வருமானம் கிடைத்து வந்தது.

இந்தப் பெருந்தொகை, அஞ்ஞானத்தை விரட்ட, சன்மார்க்கத்தை நிலைநாட்ட, பயன்பட்டதா? கேட்பதே, பாபம்.

சீமான்களுக்கு, ஜெமீன்கள் பண்ணைகள் இருப்பது போல, இந்த அருளாலயங்களுக்கும் உண்டு. வருமானத்தை அவர்கள் களியாட்டத்திலே செலவிடுவர், அவர்களிடம் சிறு தொகை ஊதியம் பெற்றுக்கொண்டு, பூஜாரி, கர்த்தரின் பெருமையைக் கழனி ஆண்டிக்கு எடுத்துக் கூறிவருவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/91&oldid=1549074" இலிருந்து மீள்விக்கப்பட்டது