பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

வகைகள் ஏராளம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதச் சட்டம்--எப்போது எந்தச் சட்டம் பயன்படுத்தப்படும் என்பது ஏழைக்கு விளங்கவே முடியாத புதிராக இருந்தது. இந்தப் புதிர், எண்ணற்ற வழக்கறிஞர்களுக்குக் கொழுத்த வேட்டை தந்து வந்தது. 860 வகையான சட்ட முறைகள் இருந்ததாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

இவைகளில் எதனையும் மாற்ற, திருத்த, மக்களுக்கு உகந்ததாக்க ரிஷ்லு முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை.

அரசர், வரிவசூலிக்க பிரான்சு முழுவதுக்கும் மொத்தமாக அறுபது பேரை நியமிப்பார். அவர்கள் ஆறு ஆண்டுகள் அதிகாரம் புரிவர். மன்னனுக்கு முன்னதாகக் குறிப்பிட்ட தொகையைக் கட்டிவிடுவர். இப்படி வரி வசூலிக்கும் உரிமை ஏலத்தில் விடப்பட்டது; அகப்பட்ட வரையில் இலாபம் என்று அவர்கள் ஏழைகளைக் கசக்கி பிழிந்தனர். ரிஷ்லுவின் ஒளிவிடும் கண்களில் இந்த அக்ரமம் படவில்லை!

விருந்தொன்றின்போது, ஒவ்வொருவரும் பொழுது போக்குக்காக, கொள்ளை அடிப்பவர்களைப் பற்றி விதவிதமான கதைகள் கூறினார்களாம். அந்த விருந்திலே வால்டேர் இருந்தாராம். அவரையும் ஒரு கொள்ளைக்காரன் கதை கூறச் சொல்லி வற்புறுத்தினார்களாம், அவர், 'ஒரே ஒரு காலத்தில் வரி ஏல அதிகாரி ஒருவன், இருந்தான். அவ்வளவு தான்!" என்று கதையை முடித்துவிட்டாராம். கொள்ளை அடிப்பவர்கள் எல்லாரையும் மிஞ்சக்கூடிய கொள்ளைக்காரன் இந்த வரி ஏல அதிகாரி என்பதைச் சுவைபட வால்டேர் சொன்னார். ரிஷ்லு இது அக்ரமமுறை என்று உணரவில்லை.

எந்தத் துறையைக் கவனித்தாலும், அநீதி தாண்டவமாடிற்று, அக்ரமம் தலைவிரித்தாடிற்று, எதையும் திருத்த ரிஷ்லு முயலவில்லை. அரசுக்காக! பிரான்சுக்காக! என்று மட்டும் பேசினான். இவ்விதமான அநீதிகளை வைத்துக் கொண்டு, எந்த அரசுதான் நிலைக்க முடியும், எந்த நாடு பிழைக்க இயலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/93&oldid=1549076" இலிருந்து மீள்விக்கப்பட்டது