பக்கம்:அரசியர் மூவர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளைய மென்கொடி 0 141



அதில் தவறு கூறுவதற்கு ஒன்றும் இல்லை. 'நொதுமலர்' என்ற முறையில் இலக்குவன் இருந்துவிடக்கூடாதென்பதை அறிவுறுத் தவே ஆண்டான் அடிமை உறவு முறையைக் குறித்தாள் மூவரினும் மேம்பட்ட அக்கற்பரசி. அடிமை ஆண்டானிடம் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு அன்பு பாராட்ட வேண்டும். தனக்கென ஒரு நிலை இல்லாதவனாய் இருத்தலே அடிமையின் இலக்கணம். ஆண்டானிடத்து முழு அன்பு பாராட்டி அவனுடைய நலம் தீங்குகளே தன்னுடைய நலம் தீங்குகளும் ஆகும் என்று நினைத்து வாழும் மன நிலையே அடிமையின் இயல்பாகும். இந்த மனநிலையுடன் இலக்குவன் காட்டில் வாழவேண்டும் என்றே கமித்திரை குறிக்கிறாள்.

இந்த அளவோடும் விடாமல், இன்னும் ஒருபடி மேலே சென்றும் ஒரு கட்டளை இடுகிறாள் மூன்றாம் அடியில். எத்துணைச் சிறந்த அடிமையிடமும் இதனை எதிர்பார்த்தல் ஆகாது; அவ்வாறு எதிர் பார்த்தல் முறையும் அன்று. ஆண்டானிடம் அன்பு பூண்டு பணி புரியும் ஓர் ஏவலன் அவ்வாண்டான் இறக்க நேரிட்டால் தானும் இறந்துவிட வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. மிகச்சிறந்த அடிமையாயின், தன் உயிரைத் தந்தேனும் ஆண்டானுக்கு உண்டாகும் இடரைத் தீர்க்க முயல வேண்டும். ஆனால், ஆண்டான் விதியால் இறக்க நேரிட்டால், அதனை நீக்க அடிமை செய்யத்தக்கது யாதுமில்லை. இதனையும் மாற்றிச் சுமித்திரை ஏவுகிறாள். 'அடிமையாகச் செல்கிற நீ, உன் ஆண்டானாய இராமன் இவ்வூருக்கு மீண்டால், மீண்டு வா; அவ்வாறு இல்லையாயின், அவனுக்கு முன்னே முடிந்துவிடு,' என்னும் கருத்தில்,

"'மன்னும் நகர்க்கே இவன்வந் திடில்வா:அது அன்றேல்,
முன்னம் முடி'. என்றனள்.”

இவ்வாறு மகனைக் கட்டளை இடும் தாயை இதுவரையிற் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. அதுவும் மாற்றாள் மகனுக்காகத் தன் மகனை இவ்வாறு கட்டளை இடும் தாயை மானிடப் பிறவியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/143&oldid=1496885" இலிருந்து மீள்விக்கப்பட்டது