பக்கம்:அரசியர் மூவர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சூழ்ந்த தீவினை ☐ 7

என்றாலும், வாழ்ந்துகொண்டிருக்கும் இக்கூட்டத்தாருக்குக் கவிஞன் ஒரு வடிவு கொடுக்க முனைகிறான். அம்முயற்சியின் பயன் தான் 'கூனி' என்னும் பாத்திரம்.

இராம காதையின் கட்டுக்கோப்புக்கு 'மந்தரை' எனப்படும் கூனி மிக இன்றியமையாதவள். அவள் இல்லையானால், இராமன் காடு செல்லப்போவதில்லை; இராவணன் கொல்லப்படப் போவதில்லை. இவை இரண்டுந்தாம் இராமாயணத்தில் உயிர் நாடிகள் என்றால், இவை நடைபெற நேரடியாகக் காரணமாக இருப்பவள் கூனிதான் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, அவளைப் பற்றி ஆராயும்பொழுது இந்த எண்ணம் நம்முடைய மனத்தின் அடிப்படையில் இருந்தாதல் வேண்டும். ஆனால், இத்தகைய நன்மை கடைசியில் விளையப்போகிற காரணத்தால் அவள் செய்த காரியத்தைச் சிறந்தது என்று யாருங் கூறிவிட மாட்டார். தவறான வழிகளைக் கடைப்பிடித்து நற்பயன் விளைவிப்பதைச் சிறந்த வழிகளுன் ஒன்றாகச் சில'சயமவாதி'கள் கருதினும், இந்த நாட்டார் இதனை நல்ல முறை என்று ஒத்துக்கொள்வதில்லை. இறுதியில் எத்துணை நன்மை விளைவதாயினும், தவறு தவறுதான்.

கசப்பான மருந்தை உட்கொள்ளுகிறோம், பல சமயங்களில். அம்மருந்து நோயைப் போக்குவது உண்மைதான். எனினும். அக் கசப்பும் மெய்ம்மையானது என்பதை மறுக்க முடியாதே. கூனியின் செயலால் நன்மை விளையினும், அவள் செய்தது தீமைதான்.

“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.”

என்ற குறளை அடிப்படையிற் கொண்டே ஆராய்ச்சி நடைபெற வேண்டும். இவை அனைத்தும் நம் மனத்தில் தோன்றுமாறு கவிஞன் கூனியை அரங்கத்திற்குக் கொணர்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/9&oldid=1495436" இலிருந்து மீள்விக்கப்பட்டது