பக்கம்:அரசியர் மூவர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 95


 பெருந்தவறு என்று கூறுவதற்கு ஒன்றுமில்லை. உணர்ச்சியைப் பிறர் அறிய வெளிப்படுத்தல் தவறு என்று கூறினால், தாயன்யின் முன்னர் இச்சிறு தவறுகள் தவிடு பொடியாகிவிடும். ஆனால், சாதாரண நிலையிலுள்ள ஒரு தாய் செய்யக் கூடிய இச்செயலைக் கோசலை செய்துவிட்டால், அது தவறாகிவிடும். 'தசரதன் முதல் தேவி, இராமனைப் பெற்ற தாய், இவ்வாறு செய்யலாமா?' என்ற வினாவிற்கு விடை அளிப்பது சிறிது தொல்லைதான். சிறந்த நிறை உடையவளும் ஆண்டிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவளுமாகிய அப்பெருமாட்டியிடம் நடுவு நிலைமையையும் அமைதியையும் எதிர் பார்க்கலாம் அல்லவா? இவை இரண்டும் தோன்றவே, அவளுடைய பேச்சு அமைகிறது. மனத்துள் நிகழும் பெரும்போராட்டத்தைச் சிறிதும் வெளிக்காட்டாமல் குழைந்து வாழ்த்துகிறாளாம். எத்தனை பெரிய மனக் கலக்கமாயினும் வணங்கினவரை வாழ்த்தலே முறை. எனவே, அவள் வாழ்த்தினாள். அவ் வாழ்த்தலின் பின்னர் உள்ள மனம் எத்தகைய நினைவில் இருந்தது, என்பதைக் கவிஞன் 'குழைந்து' என்ற சொல்லால் குறிப்பிட்டுவிட்டான். நிறையுடைய தேவியாகலின், மன வருத்தம் மிகுந்து பிதற்றாமல் மைந்தன்மேல் உள்ள அன்பு விஞ்ச வாழ்த்தினாளாம். குழைவு என்ற ஒரு சொல்லால் கோசலையின் மனம் முழுவதும் எதிரே திறந்து கிடக்கும் புத்தகம் போல நமக்கு விளங்குகிறது.

இம்மன நிலையுடன் அவள் தன்னை வணங்கிய இராமனை வாழ்த்திவிட்டுக் கேட்கும் கேள்வியிலும் அவளுடைய மன நிலையைக் கவிஞன் விளக்குகிறான். “நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?” என்றாள். இவை அனைத்தும் ஒரே அடியாகக் கேட்கப்படினும், இதனுள் மூன்று கேள்விகள் இருப்பதைக் காணலாம். இப்பாடலுக்கு உரை எழுதின பெரியார்கள் “நினைந்தது என்?” என்ற வினாவுக்குச் 'சக்கரவர்த்தியாகிய தசரதன் என்ன நினைக்கிறான்?' என்று பொருள் கூறிப் போயினர். ஆனால், இவ் வடிக்கு அவ்வாறு பொருள் கூறாமல், இராமனையே கேட்டதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/97&oldid=1496783" இலிருந்து மீள்விக்கப்பட்டது