பக்கம்:அரசியர் மூவர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 ☐ அரசியர் மூவர்


 வைத்துக்கொள்ளுதல் நலமோ எனத் தோன்றுகிறது. வினாவின் முன்னர் “நீ" என்ற எழுவாயைப் பெய்து கொண்டால், புதிய பொருள் வரக் காண்கிறோம். கோசலையைப் பொறுத்த வரை தசரதன்மேல் எள்ளளவும் ஐயங் கொள்ளவில்லை. மேலும், அவன் மந்திரசபை கூட்டி அனைவரையும் கலந்து யோசித்த நிகழ்ச்சியையும் அவள் கேள்வியுற்றிருந்தாள் என்பதைக் கண்டோம். இன்னும் கூறப் போனால், மந்திரசபையில் நடந்தவற்றைப் பிறர் அறியுமுன்னர் அறிந்த கோசலைக்கு அங்கு நடைபெற்றவை அனைத்தும் தெரிந்தே இருக்கும் அல்லவா? மன்னன் மிகுதியும் இராமனை வேண்டியதும் இராமன் மறுமொழி ஒன்றும் தாராதிருக்கவே, மன்னன் அவனைத் “தருதி இவ்வரம் எனச் சொல்லி உயிர் உறத்தழுவி” (1383) அரண்மனை புகுந்த செய்தியும் அவள் அறிந்தே இருப்பாள். அதனை அடுத்துக் கைகேயி கோயிலில் நடைபெற்றவற்றுள் ஒன்றையும் அவள் அறியவில்லை. இந்நிலையில் தசரதனுடைய செயலில் அவள் ஐயம் கொண்டு"(தசரதன்) நினைந்தது என்?” என்று கேட்க, இன்றியமை யாமை இல்லை. மந்திர சபையில் தசரதன் அவ்வளவு வேண்டியுங் கூட வாய் திறந்து பேசாமல் இருந்தவன் இராமன் ஒருவனே. எனவே, கோசலை இராமனே முடி சூட்டலுக்குத் தடை கூறிவிட்டான் போலும் என்று நினைப்பதில் தவறு இல்லை. 'நீ என்ன நினைத்து இவ்வாறு வந்துள்ளாய்? என்பது முதற்கண் கேட்கப்பட்ட கேள்வியாகும். “இடையூறு உண்டோ?” என்ற அடுத்த கேள்வி இராமனது விடையை உளப்படுத்திக் கேட்பதாகும். 'நீ என்ன நினைந்தாய்?' என்பதற்கு அவன், 'யான் ஒன்றும் நினைக்கவும் இல்லை,' கூறவும் இல்லை, என்று விடை இறுப்பதாக வைத்துக் கொண்டு அடுத்த வினாத் தோன்றுகிறது. 'இடையூறு உண்டோ?' என்பதில் “முன்னரே முடிபு செய்யப்பபெற்றவை நடைபெற" என்பது தொக்கு நிற்கிறது. இனி மூன்றாம் வினாவில் இதனையும் உடன் கூட்டி , "இடையூறு உண்டோ நெடுமுடிபுனைதற்கு?” என்று கேட்டதாகவும் கொள்ளலாம். இவ்வினாக்களில் அவ்வம்மை தசரதனைச் சந்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/98&oldid=1496785" இலிருந்து மீள்விக்கப்பட்டது