உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அவர்களுக்கு - புதிதாக லட்சம் பேருக்கு கொடுப்பதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாதது மட்டுமல்ல. ஏற்கனவே இளைஞர் அணியில் இருந்த ஆயிரக்கணக்கான பேர் வேலையில் இருந்து அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு மாதம் ரூ.175 முன்பு இருந்த கழக அரசு அளித்து வந்தது. அந்தத் திட்டம்கூட பெரும் தலைவர் காமராஜர் அவர்கள் கழக அரசுக்கு ஒரு கூட்டத்தில் பேசும்போது சொன்னார். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் வரையில் இந்த அரசு மாதம்தோறும் ரூ.200 சம்பளம் கொடுத்தால் என்ன என்று கேட்டார். நாங்கள் கணக்கிட்டுப் பார்த்ததில் 200 ரூ. அதிகப் படியான தொகையாக இருக்கிறது என்று கருதி ரூ. 175 நிதி ஆதாரத்தைக் கொண்டு அளிக்கலாம் என்று கணக்கிட்டு, ரூ.175 என்ற அளவில் கிட்டத்தட்ட ஒரு 4,000 படித்த பட்டதாரி மாணவ மாணவிகளுக்குத் தருவதாக முடிவு எடுத்து, அந்த இளைஞர் அணி உருவாக்கப்பட்டது.

இன்றைக்கு அவர்களில் பெரும்பாலோர் வேலை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு தரப்படும் என்று இதே மன்றத்தில் நம்முடைய உணவு அமைச்சர் மாண்புமிகு எட்மண்ட் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்கள். அது பரிசீலிக்கப்படும். வேறு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்திக்கொள்ள முடியுமா என்பதைப்பற்றிப் பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள். இன்னும் அதற்கான பரிசீலனை நடந்ததாகத் தெரியவில்லை. இன்னும் அந்த இளைஞர் அணியில் இருந்த யார் யார் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்கள் என்று அறிவிக்கப்பட வில்லை. ஆகவே, அதையும் நான் குற்றச்சாட்டாகக் கூற விரும்புகிறேன்.

மூடப்பட்ட தொழிற்சாலைகளைப் பற்றி எல்லாக் கட்சிக் காரர்களும் இங்கே பிரச்சினை எழுப்பினோம். அதைப்பற்றி நம்முடைய தொழிலாளர் நல அமைச்சர் ராகவானந்தம்