556
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
அளிக்கும் செல்லத்தை இரு தரப்பாருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதிகமாக கூட்டுறவு இயக்கங்களில் தாங்கள் பணியாற்றிப் பெற்றிருக்கிற பயிற்சி காரணமாக இந்த மாமன்றத்தில் நல்ல கூட்டுறவையும் இங்கு இருக்கிற உறுப்பினர்களிடத்தில் தங்களால் ஏற்படுத்த முடியும் என்று நான் கருதுகிறேன். எதிர்க்கட்சியிலே இருக்கிற நாங்கள் இந்தத் தடவை, முன்னை விட, அதிகமாக வந்திருந்தாலும், ஏறத்தாழ 70-க்குக் குறைந்தவர்கள்தான் எதிர் தரப்பில் அமர்ந்திருக்கிறோம். வள்ளுவர் கூறிய
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னார் உடைத்து.
என்ற குறளுக்கேற்ப ஆளும் கட்சியினர் ஆட்சிக் சக்கரத்தின் அச்சாணியாக எதிர்க்கட்சியை எண்ணுவார்கள் என்று கருதுகிறேன். இது தேரைச் செலுத்துகிற சாரதிக்கு நன்றாகப் புரியும். அந்தக் காரணத்தினாலோ என்னவோ, துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 'பார்த்தசாரதி' என்ற பெயரோடு வந்திருக்கிறார். எதிர்க்கட்சியாகிய எங்களை அச்சாணியாக ஆக்கிக்கொண்டு ஆட்சிச் சக்கரத்தை நல்ல முறையில் சுழற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் சபாநாயகருக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஜனநாயகத்தில் ஒரு புது மரபை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணிய எண்ணம் எப்படியோ அந்த வாய்ப்பு தவறி விட்டபோதிலும், ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சி தங்களுடைய நிழலாக இருக்க வேண்டும் என்று கருதாமல், எதிர்க்கட்சியை நிலைக்கண்ணாடியாகக் கருதி, ஆளும்கட்சியின் முகத்தில் இருக்கிற மருக்களையும் பருக்களையும் நிலைக்கண்ணாடியில் பார்த்து முகத்தைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, ஆளும் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் இந்த மாமன்றத்தில் நல்ல நட்புறவோடு நாட்டுக்கான நல்ல பல காரியங்களைச் செய்ய தாங்கள் வழிகாட்டுவீர்கள் என்று நம்பி, விரும்பி, வேண்டிக் கேட்டுக்கொண்டு, வாழ்த்தி என்னுடைய உரையை முடிக்கின்றேன்.