6
முக்கணி பிழிந்து அதிலே சக்கை ஏதுன்றி, வடித்து பிறகு ஒன்றாகச் சேர்த்து,
என்ன அருமை ! என்ன தெளிவு !
எதைத்தான் அவர் சரிவரக் கூறாது போனார், பழச்சாறு முதல், பரமன் அருட்சாறு வரை, எங்ஙனம் பெறுதல் என்பதனை எடுத்துரைத்தார் எம்மான், செந்தமிழ்க் கவி செய்த பெம்மான். “அருட் பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை”
என்று வடலூர் ராமலிங்க அடிகளாரின் பக்கதர்களில் சிலரும் கூறிக்கொண்டு, பயபக்தியுடன் தூய உடையும் வெண்ணீறும் அணிந்து அடிகளார் விழாவை அன்புடன் கொண்டாடி அருட்பா பாடி அதன் சுவை பருகி ஆனந்தங்கொண்டு “என் அரசே, என் துரையே என் இறையே” என்று இறைஞ்சி நின்று நெஞ்சு நெக்குருக பூத உடல் புளகாங்கிதமடைந்து பூஜைகள் பல புரிகின்றனர். வீதி வலம் வருகின்றனர். விழா கொண்டாடி சுத்த சமரச சன்மார்க்க போதனை செய்தும், கேட்டும், பாடல்கள் படித்தும், படித்தோர் பொருள் கூறக் கேட்டும் பரமானந்தம் அடையக் காண்கிறோம்.
பக்தியுடன் சற்று பணவசதியும் இருப்பின், பல்லக்கிலோ, ரதத்திலோ அடிகளின் திருஉருவப் படத்தினை அமைத்து பவனி வருகின்றனர். பக்தி, பணம் இருந்து அத்துடன் யூகமும் இருப்போர், ஏழைகளுக்குச் சோறிடுகின்றனர். பாடல் தெரிந்ததுடன், பண்ணின் பண்பும், பயிற்சியும், குரல் இனிமையும் உடையார் அருட்பாவைப் பாடி, இசை இன்பத்தையும் தருகின்றனர். எல்லாம் சரி!