பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/120


பின்பு நாட்டிய ஆசிரியரான நடராசன், ஆடலரசியான சகுந்தலா வீட்டில் ஒரு தேநீர் விருந்து வைத்து, அவர்களுடைய நாட்டியக் கலையை எங்களுக்கு நடத்திக் காட்டினார்கள். அன்று கவிஞர் கம்புதாசன் முதலியவர்கள் அங்கு இருந்தார்கள். திரு.நடராசன்-சகுந்தலா நாட்டியம் மிக உயர்ந்த முறையில் இருந்தது. ஆயினும் அவர்கள் மாதம் ஒன்றிற்குக் கேட்ட தொகை அதிகமாக இருந்த காரணத்தால், அவர்களை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

சென்னையில் சாந்தோம் நெடுஞ் சாலையில் கடலோரம் ஒருபெரிய கட்டிடத்தை வாடகைக்கு அமர்த்தி முத்தமிழ் நிலையத்தை அதில் தோற்றுவித்தோம். முத்தமிழையும் வளர்ப்பது இந்நிலையத்தின் நோக்கமாகும். இசைவல்லுநர் எம்.எஸ். ஞானமணி, பரதநாட்டிய ஆசிரியர் திரு. இராமசாமிப்பிள்ளை, கல்கத்தா ஓரியண்டல் நாட்டிய ஆசிரியர் தேவி பிரசாத், கவிஞர் சுரதா, திரு. வேணு கோபால் சர்மா, திரு.கிருஷ்ணமராசு, செல்விகள் சரசுவதி, இராதாமணி, இரத்தினம், சுலோசனாபாய், வல்லிக்கண்ணு ஆகியோர்,முத்தமிழ்நிலையக் கலைஞர்கள் ஆவர்.

பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகத்தை முதலில் அரங்கேற்றுவது என முடிவு செய்தோம். நாடகத்திற்கு 'இன்ப இரவு' அல்லது 'பாரதிதாசன் எண்ணங்கள்' என்ற பெயர் சூட்டப்பட்டது. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் ஓர் இரவில் ஒருங்கே நடத்துவது என முடிவு செய்தோம். 'இன்ப இரவு' நாடகத்துக்கான ஒத்திகை சுறுசுறுப்பாக நடத்தப்பட்டது. 2-1-44இல் முத்தமிழ் நிலையக் கட்டிடத்தில், நிலையத்தின் சார்பாகத் தந்தை பெரியாருக்கு ஒரு வரவேற்பு வழங்கப்பட்டது. அச்செய்தி 8-1-44 குடியரசு இதழில் விரிவாக வெளியிடப்பட்டது. அச்செய்தியும்,வரவேற்புக்கு நன்றிகூறிப் பெரியார் பேசிய பேச்சும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

செய்தி: சென்னை சென்தோம் ஐரோடில், புதுவை பாரதிதாசன்