பக்கம்:அருளாளர்கள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 அருளாளர்கள்

பெறுகின்றவனுடைய தகுதி நோக்காமல், தருபவனே வள்ளல் என்று கூறப் பெறுவான்.

இறைவனைப் புறக்கண்களாலும் கண்டு அவனுடைய அருள் வெள்ளத்துள் துளையமாடிய இப்பெரியார்கள் கூறும் சொற்கள் இறைவனுடைய சொற்களேயாம் என்பது இப்பெரியார்களின் கருத்து ஆகும். இறைவனைத் தம் உள்ளத்தே நிறுத்திவிட்டமையின் இவர்களுடைய செயல்கள், உரைகள் ஆகிய அனைத்தும் இறைவனுடையவை என்பதை இப்பெரியோர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர். அடியார்களின் பெருமையை உள்ளவாறு உணர்ந்து கூறும் வன்மையுடைய மணிவாசகர் இக்கருத்தைச் சொல்ல வந்தவிடத்து,

 “சித்தம் சிவமாக்கிச் செய்தனவே 
         தவமாக்கும்
  அத்தன்"

என்று கூறுகிறார். நம்மாழ்வாரைப் போலவே ஓதாதுணர்ந்த ‘சிறிய பெருந்தைகையா'ராகிய ஞானசம்பந்தர்,

‘எனது உரை தனது உரையாக'

       (திருமுறை:1,76,1)

எனக் கூறுவார்.

இக்கருத்தை இன்னும் விரிவுபடக் கூறுகிறார் நம்மாழ்வார். பேசுகின்ற தானும், தன் வாயும் கருவிகளே என்றும் பேசுவிக்கும் கர்த்தாவாக இறைவனே உள்ளான் என்பதையும் கூற வந்த பெரியார், ஒருபடி மேலே சென்று பேசுவிப்பவனாகிய இறைவன் என்று கூறாமல் பேசுகிறவன் என்றே கூறிவிடுகிறார்.