பக்கம்:அருளாளர்கள்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நம்மாழ்வார் . 63

‘என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னை இன்தமிழ் பாடிய ஈசனை’

(நாலா. 2832)

என்று கூறும்பொழுது வேதிக்கல்பட்ட இரும்பு பொன்னானது போல் அவன் திருவருள் பெற்று மானுடமாகிய தான் அவனாகவே ஆயின வரலாற்றைப் பேசுகிறார், ‘என்னைத் தன்னாக்கி’ என்ற சொற்களால் எப்பொழுது தான் என்ற ஒரு பொருள் முற்றிலும் அற்று ‘அவனாக ஆகி விட்டதோ அப்பொழுதே இரண்டு பொருள் அற்று ஒன்றாகிவிட்ட நிலை எய்தி விடுகிறது. எனவே பாடினவன் பாடுவித்தவன்’ என்ற இருவர்க்கு இடமின்மை அறியப்படும். இது கருதியே பெரியார் தன்னை இன்தமிழ் பாடுவித்த ஈசன்’ என்று கூறாமல் இன்தமிழ் பாடிய ஈசன்’ என்று தன்வினை வாய்ப் பாட்டில் கூறுகிறார்.

இறைவன் உள்ளே புகுந்து இவரை விழுங்கி, தானாகவே ஆகிவிடினும் அந்நிலையிலிருந்து மாறிய பின்னர் இப்பெரியோர்கள் தங்களது சிறுமையையும் தங்களை மாற்றிப் பணிகொண்ட அப்பெரியோனது பரம கருணையையும் நினைந்து நினைத்து வியப்படைகின்றனர். தம்மைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்தவர்கள் இவ் வுலகிடை இருப்பதை இப்பெரியோர்கள் நினைத்துப் பார்க்கின்றனர். அப்படி இருந்தும் அவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டுத் தங்களை இறைவன் தேடிப் பிடித்து ஆட் கொள்ள வேண்டிய கர்ரணம் எதுவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர்.

“இன்கவி பாடும் பரம கவிகளால் தன்கவி தான்தன்னைப் பாடுவியாது இன்று நன்கு வந்து என்னுடனாக்கி என்னால் தன்னை வன்கவி பாடும் என் வைகுந்தன். . .’ (நாலா. 2837)