தவத்திரு குன்றக்குடி அடிகளார்
77
அருள்நெறி முழக்கம்
நிலைக்களனாய வாழ்க்கை, வெறுப்பு நிறைந்ததாக மாறிவிடும். வெறுப்புணர்ச்சியின் காரணமாக நேர்மை என்ற நேர்க்கோட்டிலேயே - செம்மை நலஞ்சிறந்த செந்நெறியிலே செல்ல வேண்டிய மக்கள் வழிதவறிச் செல்ல நேரிடும். அப்பொழுது, நல்ல நினைவையும் அறிவையும் உணர்வையும் ஊட்டித் தளர்ச்சியை நீக்கி நேர்மை பொருந்திய நெறியிலே அழைத்துச் செல்லுந் திறமுடையனவே நல்ல இலக்கியங்கள். நல்லனவே எண்ணும், புலனழுக்கற்ற அந்தணாளர்களின் உணர்ச்சிகளே நல்ல இலக்கியங்கள். நல்லெண்ணங்களின் தொகுப்பே இலக்கிம் என்று கூறுவர் எமர்சன். மக்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து, வாழ்வாங்கு வாழச் சொல்லிக் கொடுப்பதே நல்ல இலக்கியத்திற்குரிய சான்று. இலட்சியம் நிறைந்த வாழ்க்கை நெறியில் அழைத்துச் செல்லும் ஒப்பற்ற தொண்டைத் திறம்படச் செய்வதே பேரிலக்கியமெனக் கருதினர் தமிழ்மக்கள். அதனால்தான் தமிழர்கள் "இலக்கு" என்ற சொல்லிலிருந்து தொடங்கி வளர்த்துள்ளனர்.
தமிழிலக்கியங்கள்
தமிழ்ப் பெருமக்களது அன்பு பொருந்திய - அறந்தழுவிய-அருள்நலங்கனிந்த வாழ்க்கை அடிப்படையிலிருந்து எழுந்த இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்கள். பின்னர் தமிழ் இலக்கியப் பூஞ்சோலையில் பல இலக்கிய மலர்கள் பூத்தன. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இனம் - மதம் முதலிய மாறுபாடுகளையெல்லாம் கடந்து பல பெருமக்கள் பணி செய்துள்ளனர். திருவள்ளுவர், திருத்தக்கத்தேவர், சேக்கிழார், கம்பர், இளங்கோவடிகள், உமர்ப்புலவர், தேவாரம் பாடிய மூவர், மாணிக்கவாசகர், ஆழ்வார்பெருமக்கள், தாயுமானார், வள்ளலார், பாரதியார் முதலிய பல பெரும் புலவர்கள் - சமுதாயச் சிற்பிகள் எல்லோருக்கும் தெரிந்தவர்கள், தெரிந்து கொள்ள வேண்டியவர்கள். வையகமும் வானகமும் வாழும்வரை இவர்களுடைய கருத்தோவியங்கள் வாழும் தகுதியுடையன.