பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாதுரை

15

செய்துவிட்டால், பின்னர்ச் சீர்திருத்தமெல்லாம் நடைபெறாது” என்று, வரதாச்சாரிகளும் வைத்தியநாதய்யர்களும் கனவு காண்கிறார்கள். சாரதா சட்டத்துக்கு இவர்கள் தாள் போடவில்லையா? பொட்டு கட்டுதல் (அதாவது தேவதாசி) மசோதாவுக்குத் தாள் போட வில்லையா? உடன்கட்டை ஏறுதல் என்னும் கோராமைக்குத் தாள் போடவில்லையா? அவர்கள் எதையும் எதிர்க்கத்தான் செய்வார்கள். நீதியிலே, நேர்மையிலே நம்பிக்கையுடையவர்கள் நாம். மாஜி மந்திரி டாக்டர் சுப்பராயன், திருவல்லிக்கேணியிலே, வசந்தமண்டபத்திலே, வழக்கமாகக் கூடும் நேரத்திலே. கூடிய ஒரு கூட்டத்திலே இந்த மசோதாவைப்பற்றிப் பேசுகையில்:-

"நாஸ்திகர்கள் இந்த மசோதாவை ஆதரிப்பதால் இந்த மசோதாக் கெட்டுவிடும் என்று எண்ணவேண்டாம்” என்று குறிப்பிட்டுப் பேசுகிறார். நாம் மனதார அந்த மசோதாவை ஆதரிப்பதைக் கெட்டது எனகிறார். யார்? டாக்டர் சுப்பராயன். டாக்டர் சுப்பராயன் மட்டும் ஆஸ்திகரா? அவர் சொல்வதைப்போல் நாங்களும் நாஸ்திகரல்ல. அதே சமயத்தில் அவரும் ஆஸ்திகரல்ல. அவரை வேண்டுமானால் 1949-ஆம் வருஷத்து ஆஸ்திகர் என்று சொல்லலாம். டாக்டர் சுப்பராயன் ஓர் உண்மையான நாஸ்திகர். தம் குல ஆசாரத்தையும், அனுஷ்டானத்தையும் விட்டு, ஜாதி வித்தியாசத்தையும் பாராமல், 25-ம் வயதிலே - காதலால் காரிகை ராதாபாய் அம்மையாரைக் கடிமணம் புரிந்துகொள்ளவில்லையா? கடல் கடந்து மேல்நாடு செல்லவில்லையா?

பக்தர்கள் அரைப்பலம் கற்பூரம் கொளுத்திவிட்டு, ”எனக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வரவேண்டும்” என்று ஆண்டவனை வழிபடுவதுபோல, கும்பாபிஷேகத்துக்கு