பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அறநிலையங்கள்

இவ்வளவும் நடக்கிறது, ஆனால், கோயில்களிலே உள்ள பக்தி பாங்கிலே அப்படியில்லை?

பண்டைக்காலத்தில், நூற்றுக்கால் ஆயிரங்கால் மண்டபங்களிலே, பள்ளிக்கூடங்கள் நடந்தன. கோயிலிலேயே அழகிய பூங்கோட்டம் இருந்தது. மக்கள் நீராடுவதற்காக, நல்ல குளமொன்று இருந்தது. மாலை வேளையிலே மதியை வளர்க்க, அந்த ஆயிரங்கால் மண்டபங்களிலே மக்கள் கூடுவார்கள். அக்கால அரசியலைப் பற்றியெல்லாம், அந்த மண்டபங்களிலே மக்கள் உரையாடுவார்கள். இப்பொழுது, ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ள நிலை உங்களுக்குத் தெரிந்ததே. ஆயிரங்கால் மண்டபத்தில், அர்த்தராத்திரியிலே படுத்திருந்து, வந்தவரைப் பார்த்து, "என்னப்பா தம்பி! இராத்திரி கொண்டாட்டம் தான் போலிருக்கு. என்று முதுகில் தட்டிக்கொடுத்துக் கேட்கும் கேவல நிலையில் இருக்கிறது.

கோயில்களிலே மாசு உள்ளது. அதைப் போக்கத் தான், ஓமந்தூரார் இந்த மசோதாவைக் கொண்டுவந்தார். பாசிபடர்ந்த தடாகத்தைக் கோயில்களிலே சீர் செய்கிறார்களா? இல்லை. கோயில்களிலே உள்ள பணத்தைக் கொண்டு, கோயில் அதிகாரிகள், தொழு நோயாளர்களுக்காக, ஏன் ஓர் ஆஸ்பத்திரி அமைக்கக்கூடாது? ஏழை பஞ்சை மக்களைக் காப்பாற்றும் பொறுப்பை, ஏன் கோயில் அதிகாரிகள் எடுத்துக்கொள்வதில்லை?

ஆபத்பாந்தவர், அனாதரட்சகர் என்று ஆண்டவரை ஏழைகள் அழைக்கவில்லையா? அந்த அனாதரட்சகர் வாசம் செய்யும் கோயிலில், அனாதைகளுக்கு ஏன், புகலிடம் தருதல்கூடாது?