பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாதுரை

23

கை ஒடிந்து, கால்கள் இன்றி, கண் இன்றிக் கிடக்கும். மக்களைப்பற்றி, எந்தக் கோயில் அதிகாரிகளாவது கவனம் செலுத்தியதுண்டா? நீங்கள் ஓட்டல்களுக்குச் சென்றால், மாலையில், மந்தகாசமான சங்கீதத்தைக் கேட்டுக்கொண்டே சிற்றுண்டி அருந்துகிறீர்கள். சிற்றுண்டி அருந்திய பின்னர், நல்ல துளிரான வெற்றிலையைப் போட்டுக்கொண்டு வரும்பொழுது, ஓட்டலின் வாயிற்படியில் பிச்சைக்காரன் நின்றுகொண்டு, -- நீங்கள் பாபம் செய்திருந்தாலும் சரி, பாபம் செய்யாதிருந்தாலும் சரி, -- "ஏ, புண்ணியவானே? தருமதுரையே? சாமியே? எஜமானே?" என்று கூப்பிட்டு, ஒரு காலணா கேட்கிறான்.

ஓட்டலின் உள்ளே, நீங்கள், மாலையில் மந்தகாசத்துடன் கேட்ட எம். எஸ். பாட்டெல்லாம், எங்கே? அங்கே கேட்ட இசையை, அங்குண்டான இன்ப உணர்ச்சியையெல்லாம், நீங்கள் மறந்துவிடவேண்டியது தான். இந்தப் பஞ்சை மக்களின் நிலை மாறவேண்டாமா? நீங்கள் இந்தக் காட்சியைப் பார்க்கிறீர்கள். தாயுமானார்,

”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே”

என்று பாடினார். இராகபாவத்தோடு இப்பாடலைப் பாடகர்கள் பாடக் கேட்பீர்கள். பாடகர்கள், இப்பாடலை ரசமாகப் பாடுவதால், என்ன பயன்? எல்லோரும் இன்புற்று வாழ், யார் முயற்சி எடுத்துக்கொண்டார்கள்! என்று கேட்கிறேன். வியாபாரிகளாகிய உங்களைக் கேட்கிறேன்; பொன்னுசாமியும், துரைசாமியும் முயன்றால் ஒரு வாசக சாலையாவது, பள்ளிக்கூடமாவது அமைக்கலாமே!