பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாதுரை

29

மனித பரம்பரையிலே தோன்றிய மக்கள் என்பதையும் மறந்து, எந்தப் பரம்பரை? என்று கேட்டால், நாங்கள் திருக்கயிலாயப் பரம்பரை என்று, ஐடைமுடி தரித்துக் கொண்டு, இந்த மடாதிபதிகள் ஆணவத்தோடு சொல்லக் கேட்டிருக்கிறோம்.

ஏழைகள் வாழும் இடத்தருகே வெள்ளம் வந்த பொழுது, இந்தத் திருக்கயிலாயப் பரம்பரைகள் அங்கே சென்று ஏழைகளுக்கு ஏதாகிலும் உதவி செய்திருக்கிறார்களா? பிளேக் வந்தபொழுது கவனித்திருக்கிறார்களா? நாட்டிலே பஞ்சம் வந்தபொழுது, களஞ்சியத்திலே இருந்த நெல்லை வாரி வழங்கியிருக்கிறார்களா? பாபி! பாபி! என்று உலகிலே சிலரைப் பார்த்து மடாதிபதிகள் கூறுகிறார்களே, அவர்கள், பாபிகள் என்று சொல்லப்படுபவர்களுக்கு, ஏதாகிலும் உபதேசம் செய்திருக்கிறார்களா?

கொழுத்துப் பழுத்துத் திரியும் மடாதிபதிகளுக்கு ஒரு மடமேன்? கமண்டலமேன்? குண்டலமேன்? சேல்விழி மாதரேன்? அந்தத் தையலின் மையலிலே மயங்கித் திரிந்து, மது அருந்துவானேன்? படுக்கை அறையிலே லீலைகள் பல புரிவதேன்? தமிழ் நாட்டிலே துறவிகளின் இலட்சணம் எப்படியிருந்தது என்பதைப் பத்து ஆண்டுகளுக்கு முன்னே “சந்திரகாந்தா” வின் மூலம் காட்டினார்களே!

மடாதிபதிகளைப்பற்றிப் பேசினால், அந்தக்காலத்தில் தலையைச் சீவிவிடுவது கூட உண்டு. அப்படி, இந்தக் காலத்தில் யாரும் செய்துவிடமுடியாது. அப்படிச் செய்தாலும், ஆயிரம் தலைகள் பேசத் தயாராயிருக்கின்றன.