பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறம் உரைத்த அன்னையார்

41


வணக்கம் கூறுகிறார். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம் ஆகிய மூன்று நூல்களும் அந்நூல்களின் முதற்பாடலின் முதல் தொடரையே பெயராகக் கொண்டுள்ளன. இவ்வாறு வழங்கும் பெயர்களை இலக்கணத்தில் முதற்குறிப்புச் சொல்லுக்கு உதாரணமாக உரைப்பர்.

ஆத்திசூடியின் அருமை

தமிழ் நூல்களில் சிறு பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ற தொடக்க நூலாக 'ஆத்தி சூடி' அமைந்துள்ளது. குழந்தைகள் மனப்பாடம் செய்து கொள்வதற்கு ஏற்றவாறு சிறு சிறு தொடர்களால் அந்நூல் அமைந்துள்ளது. தாயுள்ளம் படைத்த தமிழ் மூதாட்டியாராகிய ஔவையார், குழந்தைகளின் உள்ளத்தைத் தெரிந்து அவ்வாறு பாடியுள்ளார். அறஞ் செய் விரும்பு, ஆறுவது சினம், இங்ஙனம் அகர வரிசையில் அமைக்கப்பட்ட நூற்றெட்டுத் தொடர்கள் இதில் உள்ளன. இவை இறை வழிபாட்டுக்கு ஏற்ற நூற்றெட்டு மந்திரங்கள் போல் அமைந்திருப்பது ஓர் அழகாகும். இச்சிறு நூல் குழந்தைப் பருவத்தில் உள்ள பிள்ளைகள் எளிதில் கற்று உள்ளம் கொள்ளத் தக்கது அன்றோ?