பக்கம்:அறநெறி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சான்றோர் நெறி

1. பகுத்துண்டு பல்லுயிரோம்புதல்

இந்த உலகில் வாழும் மனித இனத்திற்கு அடிப் படைத் தேவைகள் மூன்றாகும். அவை உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடமாகும். இதனையே புறநானுாற்றுப் புலவர் ஒருவர்,

உண்பது நாழி: உடுப்பவை இரண்டே பிறவு மெல்லாம் ஓரொக் கும்மே

என்று குறிப்பிட்டார். தாயுமான தயாபரர், “யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்” என்றார். இதனையே இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் பாரதியாரும்

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்

என்றார். எனவே வயிற்றுப் பசியைத் தணிப்பதே மேலான அறமாகின்றது.

‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பது பழந்தமிழர் ாைக்கு. “வாடிய பயிரைக் கண்ட போ தெல்லாம் வாடிய” இரக்க நெஞ்சினரான வடலூர் வள்ளற்பெருமானும் அற்றார் அழிபசி தீர்த்தல்” சமுதாயத்திற்கு ஆற்றும் பெருந்தொண்டு எனக் கருதி வடலூரில் சத்திய தருமச் சாலை கண்டு, பசியறாது நின்ற ஏழைகளின் வயிற்றுப்பசியை நீக்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/76&oldid=586972" இலிருந்து மீள்விக்கப்பட்டது