பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அறப்போர்



யாகக் கற்றுத் தேர்ந்து முன்னேற்றமடைய வேண்டுமென்ற பெரு முயற்சி செய்துவர, அவ்வறிவுடையோர்களைப் பார்த்தாயினும் அறிவுபெறாது, ஒரு முயற்சியும் இல்லாமல், இந்தியைக் கட்டாய பாடமாக்குவதால் வரும் இன்னல்கள் எவை என்று தமிழை இகழ்ந்து பேசிக் கொண்டு வறிதே காலங்கழிக்கும் தோழர் முத்துரங்கம் அவர்கள் போன்றாரைத் தமிழர் என்று அழைப்பதா? தமிழுக்குக் கேடு சூழும் தமிழ் மொழிப் பகைஞர் என்று அழைப்பதா? கூறுமின்கள்! தாய்மொழிப் பற்றே தாய் நாட்டுப் பற்றென்பதை உணராது, தான் தோன்றித் தம்பியான்களாய்த் தடுமாறித் திரியும் தமிழ் மக்கள் சிலரைப் பார்த்து வருந்துவதைவிட வேறு என்ன செய்ய இயலும்?

இனித், தாய்மொழிப் பற்றே தாய்நாட்டுப் பற்றென்பதை நன்குணர்ந்த கவிமன்னராகிய இரவீந்திரநாதர் "கீதாஞ்சலி" என்னும் உலகம் போற்றும் ஒரு நூலை முதல் முதலில் தம் தாய்மொழியாகிய வங்கத்திலன்றோ யாத்தார். உலகமறிந்த பெரியாராகிய பாலகங்காதர திலகர் தாம் அருளிச்செய்த "கீதா ரகசியம்" என்னும் நூலைத் தம் தாய் மொழியாகிய மகாராஷ்டிரத்திலன்றோ வெளியிட்டார். இந்திமொழி இந்தியாவிற்குப் பொது மொழியாக வேண்டு மென்று பாடுபட்டவருள் தலை சிறந்தவரான காந்தியடிகள் தமது "வரலாற்றைத் " தம் தாய்மொழியாகிய கூர்சரத்திலன்றோ எழுதிக்காட்டினார். மேலே குறிப்பிட்ட மூவரும் ஆங்கிலத்தில் நிரம்பிய புலமை பெற்றவர்கள். அவர்கள் எழுதும் ஆங்கிலத்தின் அழகான நடையை ஆங்கிலேயரே போற்றி மகிழ்கின்றனர். இப்பெரியார்களின் வாழ்வுஞ்செயலும், பிறவும் உலகுக்கு எடுத்துக்காட்டாக (Example) நின்று துணை செய்கின்றன. தாய்மொழிப்