பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போருக்கு அழைக்கிறார்!


அறப்போருக்கு அழைக்கிறார்! ஆகாத இந்தியை நுழைக்கிறார், ஆணவத்தைத் துணையெனக் கொண்டவர்களின் சதிப் பேச்சிலே மயங்கி, அவினாசியார், கட்டாய இந்தியை நுழைக்கிறார், களம் வா தமிழா! என்று அழைக்கிறார். கல்லறை இருக்கிறது சென்னையில்! மொழிப் போரில் உயிர்நீத்த உத்தமர்களின் கல்லறை!

காளைகள் பலர், பலப்பலர் உள்ளனர், கட்டாய இந்தியை எதிர்த்துக் கடுஞ்சிறை சென்று, கல் உடைத்தவர்கள், செக்கும் இழுத்தவர்கள், சமையலறையிலிருந்து நேரே சிறை நோக்கிச் சென்ற சீலமிகு செந்தமிழ்த் தாய்மார்கள் உள்ளனர்!

சிறையிலே, தாயுடன் இருந்து, குழந்தை பருவத்திலேயே சிறைக் கஞ்சாராகி வளர்ந்த குழந்தைகள், சிறுவர் சிறுமியராக உள்ளனர்.

காவி அணிந்தோர்.... கலை பயின்றிருந்தோர் காடு, கழனி உழுதுகொண்டிருந்தோர் அனைவரும், களம் வந்தனர்--அற்ப மென்போம் அந்த இந்தி தன்னை; அதன் ஆதிக்கம் தன்னை வளரவிடோம்!’ என்று முழக்கமிட்டுக் கொண்டு.

ஆசிரியர் திருமலைசாமியும், அஞ்சா நெஞ்சுடைய அழகர்சாமியும், தமிழர் பெரும்படையை நடத்திவந்தனர். சென்னைக் கடற்கரை தமிழரின் இல்லமாகிவிட்டது. பாரதியார் பரணி--விசுவநாதர் வீரமுரசு ஒலிக்கும் இடமாகி-