பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

31


செயலில் மும்முரமாகச் செய்துவரும் பார்ப்பனருக்கு ஆதிக்கம் இருக்கக்கூடாது, பதவியில் அமர்ந்ததும், காங்கிரசின் கோட்பாடுகளையே காற்றில் பறக்க விட்டுவிட்டு, அதன் தூய்மையைக் கெடுத்த கயவர்களிடமிருந்து தமிழகம் மீட்கப்பட வேண்டும் என்று பேசுகின்றனர்.

தேசீயப் போராட்டம் என்ற போர்வைக்குள்ளே புகுந்துகொண்டு காங்கிரசைத் தமது கைப்பொம்மை யாக்கிக்கொண்டு, கபட நாடகமாடும் முதலாளிமார்களின் முகாமை முறியடித்து, நாட்டிலே வளர்ந்துவரும் காங்கிரஸ் பாசிசத்தை ஒழித்து, பாமரன் வாழவும், பாட்டாளி மீளவும், சமதர்மம் தழைக்கவுமான திட்டம் தேவை-- இத்தகைய திட்டம் தோன்றாதபடி தடுத்து, இலாபக் கோட்டைகள் கட்ட விரும்பும் வடநாட்டு முதலாளித்துவ முறை ஒழிக்கப்படத்தான் வேண்டும் என்பதை, மதுரை, 'தமிழ்நாடு போன்ற இதழ்கள் அச்சம், தயை, தாட்சணியமின்றி எடுத்து எழுதிக்கொண்டுள்ளன.

இவ்வளவும் ஈடேற, தமிழரசு தேவை--எல்லை பற்றி உள்ள தொல்லையைக் கல்லி எடுத்து வீசிவிடவேண்டும், தமிழருக்குத் தமிழரசு வேண்டும், என்று 'முரசு' கொட்டுகிறார், காங்கிரஸ் நடத்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியிலிருந்த நண்பர் ம. பொ. சி.

இங்ஙனம் பலர், பலப்பல அளவு, வருகின்றனர், நாம், தன்னந்தனியே கேலிக்கும், கண்டனத்துக்கும், எதிர்ப்புக்கும், ஏசலுக்கும் இடையே சென்றுகொண்டுள்ள பாதையில்!